துவாசில் உள்ள கெப்பல் பட்டறையில் பாரந்தூக்கி கவிழ்ந்ததில் காணாமற்போன ஊழியர் ஒருவரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பட்டறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பங்களாதேஷைச் சேர்ந்த 38 வயது ஊழியரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர். கெப்பல் பட்டறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, கடலோரக் காவற்படை ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
நேற்று முன்தினம் காலை 10.40 மணியளவில் 51 பயனியர் செக்டர் ஒன்றில் விபத்து நேர்ந்தது. அதைத் தொடர்ந்து ஊழியர் கடலுக்குள் விழுந்தார்.
நேற்று பிற்பகல் 3.15 மணி நிலவரப்படி அவரைக் காணவில்லை.
இந்த விபத்தில் நால்வருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. பங்களாதேஷைச் சேர்ந்த இருவர், சீனாவைச் சேர்ந்த ஒருவர், சிங்கப்பூரர் ஒருவர் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மனிதவள அமைச்சு கூறியது.
பாரந்தூக்கி நிறுத்திவைக்கப்பட்டிருந்த பகுதி இடி விழுந்ததால் கடலுக்குள் கவிழ்ந்ததாக கெப்பல் பட்டறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது, இரண்டு ஊழியர்கள் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்பட்டது.
ஒருவர் மீட்கப்பட்டார். மற்றொருவரைக் காணவில்லை.
பட்டறையில் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து மனிதவள அமைச்சு விசாரித்து வருகிறது.
இச்சம்பவம், கெப்பல் பட்டறையில் இவ்வாண்டு நிகழ்ந்த இரண்டாவது வேலையிட விபத்து. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று சாரக்கட்டு சரிந்து விழுந்ததில் கப்பலில் பழுதுபார்ப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பங்களாதேஷ் ஊழியர்கள் மாண்டனர்.
இம்மாதம் மூன்றாம் தேதி நிலவரப்படி வேலையிட விபத்துகளில் இவ்வாண்டு 32 பேர் உயிரிழந்துள்ளனர்.