தூங்கியதால் ஏற்பட்ட விபத்து: ஓட்டுநருக்கு 12 வாரம் சிறை

தூங்கியதால் ஏற்பட்ட விபத்து: ஓட்டுநருக்கு 12 வாரம் சிறை

1 mins read
f6f83e8d-2acb-4dae-b5a9-49fb9d066b71
படம்: சின் மின் நாளிதழ் -

எஸ்பிஎஸ் பேருந்தை ஓட்டிகொண்டிருந்தபோது தூங்கி விழுந்த ஓட்டுநருக்கு 12 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ரக வாகனங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்ட 42 வயது ‌ஷிஃபுடின் ஹுசேனுக்கு தடை விதிக்கப்பட்டது.

சென்றாண்டு ஜூன் 8 அன்று விபத்து ஏற்பட்டது. அதற்கு முந்தைய இரவு ஷிஃபுடின் நான்கு மணிநேரம் மட்டும் தூங்கியதாகக் கூறப்பட்டது. சுமார் 11.30 மணியளவில்தான் தூக்கம் வந்ததாகவும், விடியற்காலை மூன்று மணிக்கு அவர் எழுந்துவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அன்று அவர் காலை பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

மாலை சுமார் 2.40 மணியளவில் ஈசூன் ஸ்திரீட் 13 வழி பேருந்தை ஓட்டிக்கொண்டிந்தபோது ஷிஃபுடின் தூங்கிவிழுந்தார். சுமார் மூன்று வினாடிகள் ஷிஃபுடின் தன் கண்களை மூடியது பேருந்தில் இருந்த காமிராவில் பதிவாகியிருந்தது.

ஒரு பேருந்து நிறுத்துமிடத்தில் பேருந்து மோதியது. பேருந்தில் இருந்த மூவருக்கு காயங்கள் ஏற்பட்டன. ஒரு 85 வயது முதியவர் கீழே விழுந்து தனது இடது கையை உடைத்துகொண்டார். ஒரு 53 வயது மாதுக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொரு பயணிக்கு கை உடைந்ததோடு, உதட்டில் வெட்டுகாயம் ஏற்பட்டது.

தண்டனையை குறைக்குமாறு கேட்டுக்கொண்ட ஷிஃபுடின் தனக்கு போதிய ஓய்வு அளிக்க தனது நிறுவனம் தவறிவிட்டதாகக் கூறினார். பணிகளுக்கிடையே குறைந்தது ஒன்பது மணிநேரத்தை ஓட்டுநர்களுக்கு ஓய்வெடுக்க கொடுப்பதாக எஸ்பிஎஸ் பேருந்து நிறுவனம் குறிப்பிட்டது.