கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள், அடுத்த திங்கட்கிழமை முதல் தனிமை உத்தரவை நிறைவேற்றத் தேவை இருக்காது. இதன்படி சிங்கப்பூரை வந்தடைந்ததும் முன்னர் நடைமுறையில் இருந்த ஏழு நாள் இல்லத் தனிமை உத்தரவை வெளிநாட்டுப் பயணிகள் நிறைவேற்றத் தேவையில்லை.
அதேவேளை, நீண்டகால அட்டைதாரர்களும் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிலான குறுகியகால வருகையாளர்களும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையில் அனுமதி ஒப்புதல் விண்ணப்ப நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள்.
கொவிட்-19 கிருமித்தொற்றைக் கையாள்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை பணிக்குழு, நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தது. சமூக அளவிலும் அனைத்துலக அளவிலும் நிலைமையை மேம்படுத்துவதற்காக பயணம் தொடர்பான நடைமுறைகள் தளர்த்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு இல்லத் தனிமை உத்தரவு அகற்றப்படுவதால் 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறையும் நீக்கப்படுகிறது. இருப்பினும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர், சிங்கப்பூருக்கு வரும் முன் இரண்டு நாள்களுக்குள், தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தும் 'பிசிஆர்' அல்லது 'ஏஆர்டி' பரிசோதனையைத் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும்.
சில எஸ்ஐஏ பயணங்களில் முகக்கவசம் தேவை இல்லை
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்வோர், அடுத்த திங்கட்கிழமை முதல் குறிப்பிட்ட சில பயணங்களின்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று நிறுவனம் கூறியுள்ளது. சாங்கி விமான நிலையத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

