இரண்டு தொழில் சங்கங்களைச் சேர்ந்த ஒப்பந்த மற்றும் பொருள் விநியோக வாகன ஓட்டுநர்களுக்கு ரொக்கமாக $300 கிடைக்கவிருக்கிறது.
எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தைச் சமாளிக்க உதவியாக அவர்கள் அந்தத் தொகையைப் பெறுவார்கள் என்று தேசிய தொழிற் சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) நேற்று தெரிவித்தது.
தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கத்தின் உறுப்பினராக இருப்போருக்கு 'என்டியுசி ஒப்பந்த சுய வேலைப் பிரிவு நிவாரணத் திட்டம்' மூலம் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, தேசிய விநியோக ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் பொருள் விநியோக வாகன ஓட்டுநர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு நிதியுதவி கிடைக்க இருக்கிறது.
இந்தத் திட்டம் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் 1,000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் நன்மை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை ஒன்றில் என்டியுசி தெரிவித்தது.
தகுதி பெறுவோர் இம்மாதம் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை http://ufse.org.sg/Pages/reliefscheme2022.aspx என்ற இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
சங்கத்தில் எவ்வளவு காலம் உறுப்பினராக இருக்கிறார் என்பதை பொறுத்தும் வேலைக்கு எந்த வகை வாகனத்தைப் பயன்படுத்துகிறார் என்பதன் அடிப்படையிலும் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெறுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கேற்ப தொகை வழங்கப்படும்.
விண்ணப்பத்தின் பேரில்தான் தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்ப தேதியில் மூன்று மாத காலத்திற்கும் மேற்பட்ட காலம் சங்கத்தில் உறுப்பினராக இருப்போருக்கு கூடினபட்சமாக $300 ஒதுக்கப்படும்.
அதேபோல, மூன்று மாதத்திற்கும் மேற்பட்ட காலம் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு $150 கிடைக்கும்.
மூன்று மாதத்திற்கும் குறைந்த காலம் உறுப்பினராக இருக்கும் புதியவர்களுக்கு $50 குறைவாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.

