சிங்கப்பூரில் தஞ்சோங் பகாரில் சென்ற ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி, பிஎம்டபிள்யூ கார் ஒரு கட்டடத்தில் மோதி தீப்பிடித்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களின் மரணம் போக்குவரத்து தொடர்பான ஒரு துரதிர்ஷ்ட சம்பவம் என்று இந்த வழக்கை விசாரித்த அரசாங்க மரண விசாரணை அதிகாரி தீர்ப்பளித்தார்.
யாருமே மதுபானப் போதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்பதை வாகன ஓட்டுநர்களுக்கு நினைவுபடுத்தும் ஒரு சம்பவமாக இந்த வழக்கு இருக்கிறது என்றாரவர்.
அந்த ஐவரில் ஒருவரான ஜோனாத்தன் லாங் ஜுன்வெய், 29, என்பவர் அந்தப் பகுதியில் அந்த காரை 182 கி.மீ. வேகம் வரை ஓட்டினார். அதிகாலை சுமார் 5.40 மணிக்கு அந்த கார் அந்தப் பகுதியில் உள்ள கடை வீடு ஒன்றின் தூணில் மோதி தீப்பிடித்தது.
அப்போது அந்த வாகனம் 87 கி.மீ.-99 கி.மீ. வரை வேகத்தில் போய் கொண்டு இருந்தது.
ஆனால் அப்பகுதியில் 50 கி.மீ. வேகத்தில்தான் காரை ஓட்டிச் செல்ல முடியும். திரு லாங், மதுபோதையில் காரை ஓட்டியது பின்னர் தெரியவந்தது. இந்தச் சம்பவம் சென்ற ஆண்டின் சீனப் புத்தாண்டின் 2வது நாளன்று நிகழ்ந்தது.
அந்த காரில் இருந்த நான்கு பயணிகளும் கொல்லப்பட்டனர். அந்த நால்வரும் 26 வயது முதல் 29 வரை வயதுள்ள இளையர்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சாலை விபத்தில் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் ஐவர் மாண்ட சம்பவம் எதுவும் நிகழவில்லை என்று சென்ற ஆண்டு பிப்ரவரியில் காவல்துறை கூறியது.
விபத்து நிகழ்ந்ததற்கு கொஞ்ச நேரம் முன்னதாக திரு லாங்கும் அவருடைய நண்பர்களும் அங் மோ கியோவில் சீனப் புத்தாண்டு விருந்தில் கலந்துகொண்டு மதுபானம் அருந்தியதாக இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த போக்குவரத்து காவல்துறை புலன்விசாரணை அதிகாரி தெரிவித்து இருந்தார்.

