தென்கிழக்கு ஆசியாவின் ஆகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான சிங்கப்பூரின் சிங்டெல், தனது முதல் காலாண்டு லாபம் 41.3% அதிகரித்து உள்ளதாக அறிவித்துள்ளது.
இருந்தாலும் பணவீக்கம் அதிகரிப்பதாலும் வட்டி விகிதம் கூடுவதாலும் நிறுவனம் செயல்படக்கூடிய சூழல் சவால்மிக்கதாக இருக்கிறது என்று சிங்டெல் எச்சரித்துள்ளது.
இந்தச் சூழலில் மிக விவேகமாக, விரைவாக செயல்பட வேண்டிய தேவை இருப்பதாக அதன் தலைமை நிர்வாகி யுயென் குவான் மூன் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தார்.
சிங்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த முதல் காலாண்டில் 41.3% அதிகரித்து $628 மில்லியனாகியது. இது சென்ற ஆண்டில் $445 மில்லியனாக இருந்தது.
வட்டி, வரிகள், தேய்மானம், கடனடைப்பு ஆகியவற்றுக்கு முன்னதாக நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் 2% குறைந்து $977 மில்லியனாக இருந்தது. அதேவேளையில், நடைமுறை வருமானம் 5.6% குறைந்து $3.6 பில்லியனாக இருந்தது.

