சிங்கப்பூரும் புருணையும் எரிபொருள், பசுமைப் பொருளியல், உணவு, மருத்துவ பொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்து கின்றன.
இதையொட்டி நேற்று இரண்டு பரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. செயின்ட் ரெகிஸ் சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் சிங்கப்பூருக்கு இரண்டு நாள் வருகையளித்திருக்கும் புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவும் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரின் சார்பில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் புருணை சார்பில் பிரதமர் அலுவலக அமைச்சர் டத்தோ ஸ்ரீ செட்டியா டாக்டர் அவாங் ஹாஜி முஹமட் அமின் லியுவ் அப்துல்லாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
வர்த்தக, தொழில் அமைச்சு மற்றும் புருணை நிதி அமைச்சு தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முன்னேற்றங்களை கவனிப் பதற்காக கூட்டுக் குழு ஒன்றை அமைக்கவும் இரு அமைச்சர்களும் இணங்கினர்.
நீடித்த, நிலையான எதிர் காலத்தை நோக்கி நடைபோடும் இரு நாடுகளின் பரஸ்பர நலன்களை புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதி பலிப்பதாக அமைச்சர் கான் குறிப்பிட்டார்.
"சிறந்த நட்பையும் ஒத்துழைப்பான துறைகளை அடையாளம் காணவும் புருணையுடனான பங்காளித்துவம் தொடரும்," என்றார் அவர்.
கரிமம் குறைவான தொழில் நுட்பம், கரிம சேகரிப்பு போன்ற வளர்ந்துவரும் துறைகளில் இரு நாடுகளின் பருவநிலை இலக்கை அடைய இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்.
உணவு, தடையில்லா மருத்துவ பொருள் விநியோகம் போன்றவற்றில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கடி காலத்தில் பரஸ்பர ஆதரவுக்கான ஆற்றலை அதிகரிக்க இது உதவும். இதனால் இரு நாடுகளுக்கு இடையே உணவு, மருத்துவப் பொருள்களின் விநியோகம் தடையில்லாமல் இருக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையே பொருளியல் ஒத்துழைப்பு நீண்டகாலமாக தொடர்கிறது. புருணை உடனான சிங்கப்பூரின் வர்த்தகம் 2020லிருந்து 24 விழுக்காடு அதிகரித்து 2021ல் 2.7 பில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது.
புருணை சுல்தானின் சிங்கப்பூர் பயணம் இன்று நிறைவடைகிறது.