தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தில் முதன்மை ஆலோசகராக பணியாற்றிய ஜெஃப்ரி ஹோ கியாட், 56 தமது ஒப்பந்த வேலை நீட்டிக்கப்படுமா என்பதை அறியாமல் இருந்தார்.
இவ்வேளையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி தாம் வேலை பார்க்கும் அமைப்பின் முதலாளிக்குத் தெரியாமல் தமது அதிகாரத்தின் மூலம் பலன்அடைந்துள்ளார்.
நேற்று நீதிமன்றத்தில் அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவற்றை ஒப்புக் கொண்ட அவருக்கு நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிபதி அவருக்கு தண்டனை விதிக்கும்போது இதர நான்கு குற்றச்சாட்டுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டார்.
ஜெஃப்ரி தனது உதவியாளரான முன்னாள் செயலாளர் இங் சோக் லுவானுடன் சேர்ந்து தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தை $41,000 மேல் ஏமாற்றியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இங்குக்கு இரண்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் கிரேஸ் லிம், இருவருக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்ததாகவும் 2016 அக்டோபர் 31 வரை இங்குடன் ஜெஃப்ரி ஹோ இணைந்து செயல்பட்டதாகவும் கூறினார்.
இருவரும் நம்பிக்கை மோசடி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜெஃப்ரி ஹோ, வடிவமைப்பு துறையில் சிறந்து விளங்கியதால் ஆணையத்தில் இருந்த சக ஊழியர்கள் தேவையான வேலைகளை நிறைவேற்ற தகுந்த நிறுவனத்தை பரிந்துரைப்பார் என எதிர்பார்த்தனர்.
ஆனால் தனது சொந்த நிறுவனத்துக்கே அப்பணிகளை அவர் திருப்பிவிட்டார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கிரேஸ் லிம் கூறினார்.

