ஆசியாவிலேயே பண்டக வர்த்தகத்தில் கொட்டிகட்டிப் பறந்த நோபள் குருப் லிமிட்டெட் (என்ஜிஎல்) நிறுவனத்துக்கு ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் அமலாக்க அதிகாரிகள் 12.6 மில்லியன் வெள்ளி அபராதம் விதித்துள்ளனர்.
அந்நிறுவனம் முறையற்ற கணக்கு வழக்குகள் மற்றும் பல பில்லியன் டாலர் நட்டம் காரணமாக நொடித்துப் போனது.
என்ஜிஎல் நிறுவனத்தின் முறையற்ற கணக்கு வழக்குகள் குறித்து 2018ஆம் ஆண்டில் விசாரணை தொடங்கப்பட்டதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையமும் (அக்ரா) வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
இந்த விசாரணையில் வெளிநாட்டு அதிகாரிகளின் உதவியும் நாடப்பட்டதாக அறிக்கை கூறியது.
என்ஜிஎல் நிறுவனத்திற்கு அதன் ஆண்டு நிதி அறிக்கையில் தவறான வழிகாட்டும் தகவல்கள் இடம்பெற்றதால் சிங்கப்பூர் நாணய ஆணையம் 12.6 மில்லியன் வெள்ளி அபராதத்தை விதித்தது.
அந்நிறுவனத்தின் அப்போதைய துணை நிறுவனத்தின் இரண்டு முன்னாள் இயக்குநர்களையும் 'அக்ரா' கடுமையாக எச்சரித்துள்ளது.
இருவரும் நிதியறிக்கையின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க தவறி விட்டனர். இது, நிறுவனச் சட்டத்தை மீறிய செயலாகும்.
2012 முதல் 2016 வரையிலான நிதி அறிக்கைகள் தொடர்பாக எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தைச் சேர்ந்த நோபள் ரிசோர்சஸ் இண்டர்நேஷனலின் (என்ஆர்ஐ) கணக்காய்வாளராக செயல்பட்டவர்களுக்கு எதிராகவும் பொது கணக்காய்வு மேற்பார்வை குழு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
சுரங்க உரிமையாளர்கள், நிலக்கரி உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் செய்துகொண்ட உடன்பாடுகளை சேவை உடன்பாடுகளாகக் கருதாமல் நிதித்துறை உடன்பாடு களாக வகைப்படுத்தும்படி கேட்டு அதன் மூலம் சரியில்லாத கணக்கு ஏற்பாடு ஒன்றுக்கு என்ஜிஎல்லும் என்ஆர்ஐயும் கோரியிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் வழி லாபமும் சொத்து மதிப்பும் செயற்கையான முறையில் கூடியது போன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக கூட்டு அறிக்கை தெரிவித்தது.

