நீண்ட ஆயுள்; நிறைவான, இலக்குள்ள வாழ்வு

நீண்ட ஆயுள்; நிறைவான, இலக்குள்ள வாழ்வு

2 mins read
37b0c6fb-531c-4adc-bf4c-94eccb6a6a45
-

ஆயுள்­கா­லம் அதி­க­ரித்து வரும் நிலை­யில் வளர்ந்த நாடு­களில் 100 ஆண்டு ஆயுள்­கா­லம் வழக்­க­மா­கக் கூடும். ஆனால் முது­மை­யில் தனிமை காணும் போக்கு கவலை அளிக்­கிறது. கடந்த பத்­தாண்­டு­களில் தனி­யாக வாழும் எண்­ணிக்கை இரட்­டிப்­பாகி 60,000ஐக் கடந்­துள்­ளது. 2012ல் அந்த எண்­ணிக்கை 30,000 மட்­டுமே.

இந்­நி­லை­யில் நீண்ட ஆயுள்­ காலத்­துக்­கான தேவை­யான பணத்­தைச் சேர்க்­க­வும் முழு­மை­யான அணு­கு­முறை கொண்டு முதி­ய­வர்­க­ளின் நல்­வாழ்வை ஊக்­கு­விக்­க­வும் தனி­ந­பர்­களும் சமு­தா­யங்­களும் வழி­தே­ட­ வேண்டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­யுள்­ளார்.

"ஆயுள்­மு­ழு­தும் மக்­கள் அர்த்­த­மும் இலக்­கும் உள்ள வாழ்வை வாழ எவ்வாறு உத­வப்­போ­கி­றோம் என்­பதே எல்லா சமு­தா­யங்­களும் எதிர்­நோக்­கும் கேள்வி," என்று திரு ஹெங் கூறி­னார்.

முதி­யோர் சமூ­கத்­துக்­குச் சுமை எனும் தற்­போது நில­வும் கருத்து மாற வேண்­டிய குறு­கிய மனப்­போக்கு என்­றும் அவர் குறிப்­பிட்­டார். மூப்­ப­டை­யும் மக்­க­ளின் பங்­க­ளிப்­பால் உண்­டா­கும் பலன்­களை ஈட்ட வழி­காண வேண்­டும் ­என்று துணைப் பிர­த­மர் சொன்­னார்.

அமெ­ரிக்­கா­வின் தேசிய மருத்­து­வக் கழ­கம் வரைந்த நல­மிக்க நீண்ட ஆயுள்­கா­லத்­துக்­கான உல­க­ளா­விய வருங்­கா­லத் திட்­டம் ஆசி­யா­வில் தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தார அமைப்­பில் நடை­மு­றைப் படுத்­தப்­பட்­டது. அதற்­கான நிகழ்ச்­சியை நேற்று தொடங்கி வைத்து திரு ஹெங் பேசி­னார்.

ஜூனில் வெளி­யி­டப்­பட்ட அந்த வருங்­கா­லத் திட்­டத்தை, பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த அனைத்­து­லக நிபு­ணர்­கள் கொண்ட ஆணை­யம் மூன்று ஆண்­டு­கள் எடுத்து வரைந்­துள்­ளது.

தேசிய பல்­க­லைக்­ க­ழக மருத்­து­வ­ம­னை­யின் சுகா­தா­ரப் புத்­தாக்­கம், உரு­மாற்­றத் துறை­யின் மூத்த துணைத் தலை­வர் ஜான் வோங் ஆணை­யத்தின் இணைத் தலை­வ­ராக செயல்­பட்­டார்.

நல­மிக்க நீண்ட ஆயுள் உள்ள வாழ்வை எந்தெந்த அம்­சங்­களில் அதி­கம் மேம்­ப­டுத்­த­லாம் என்­பதை திட்­டம் ஆராய்ந்து கூறி­யது. வாழ்க்­கை­யின் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் அர்த்­த­முள்ள வாய்ப்­பு­கள், சமூ­கப் பாது­காப்பு, நிதிப் பாது­காப்பு, இருக்­கும் சூழல், மருத்­து­வப் பரா­ம­ரிப்பு, வாழ்­நாள் கற்­றல் ஆகிய அம்­சங்­கள் ஆரா­யப்­பட்­டன.

ஆயுள்­கா­லம் கூடி­ய­போ­தும் ஓய்வு ­பெ­றும் வயது மாற­வில்லை என்­றும் மூத்­தோ­ருக்கு எதி­ரான பாகு­பாடு தொடர்­கிறது என்­றும் திரு ஹெங் சுட்­டிக்­காட்­டி­னார்.

சட்­ட­மாற்­றங்­கள் இதில் உத­வ­லாம். ஆனால், மூத்த ஊழி­யர்­ களுக்கு வாய்ப்பு அளிப்­பது இரக்­கத்தின் அடிப்படையில் அல்லஎன்­றும் அது நிறு­வ­னங்­க­ளுக்கு நல்­லது என்­பதை முத­லா­ளி­கள் உணர வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

ஒரு குழு­வில் வயது மூத்­த­வர்­கள் இருக்­கும்­போது அவர்­க­ளைச் சுற்­றி­யுள்­ள­வர்­க­ளின் உற்­பத்­தித் திறன் கூடும் என்­றும் குழு­வின் செயல்­தி­றன் அதி­க­ரிக்­கும் என்­பதை ஆய்­வு­கள் காட்­டு­வ­தாக துணைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.