ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவு குற்றம் என்று வகைப் படுத்தும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும் எனும் அறிவிப்பைத் தொடர்ந்து, ஒற்றுமைக்கும் ஆக்கபூர்வமான உரையாடலுக்கும் இங்குள்ள சமய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
குற்றவியல் சட்டத்தின் சட்டப்பிரிவு 377ஏ மீட்டுக் கொள்ளப்படுவது பற்றி நேற்று கருத்துரைத்த சிங்கப்பூர் பௌத்த சம்மேளனம், பிரிவை உண்டாக்கும் இந்த விவகாரத்தால் மேலும் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்க, நாடு ஒன்றாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றது.
சட்டப்பிரிவு 377ஏ ரத்து செய்யப்படும் என்றும் திருமணத்தின் வரையறையை மாற்றக் கோரும் சட்டவழக்குகள் தொடுக்கப்படுவதைத் தடுக்க, அரசாங்கம் அரசியல் சாசனத்தை மாற்றும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேசிய தினப் பேரணி உரையில் கூறி யிருந்தார்.
ஆணும் பெண்ணும் செய்துகொள்வதே திருமணம் என்று வரையறுப்பதும் அதன் அடிப்படை யில் குடும்பங்களுக்கு ஆதரவான கொள்கைகளை வகுப்பதும் நாடாளுமன்றத்தின் உரிமை என்பதை அரசியல் சாசனத்தின் மாற்றம் தெளிவுபடுத்தும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் க. சண் முகம் தெரிவித்தார்.
இவை குறித்து ஏற்கெனவே சிங்கப்பூர் மெத்தடிஸ்ட் தேவாலயம், இந்து ஆலோசனை மன்றம், சீக்கியர் ஆலோசனை மன்றம், முஸ்லிம் நிபுணர்களின் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கருத்துஉரைத்துள்ளன.
சட்டப் பிரிவு 377ஏ பற்றிய பேச்சு 2007 முதல் தொடங்கியதாகவும் குடிமை, சமய அமைப்பு களுடன் அரசாங்கம் இதுபற்றி ஆழமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் சிங்கப்பூர் பௌத்த சம்மேளனம் குறிப்பிட்டது. இந்த விவகாரத்தால் காலப்போக்கில் ஏற்பட்டிருக்கக்கூடிய கருத்துவேறுபாடுகளைத் தணிக் கும் பொருட்டு நடுநிலையான கலந்துரையாடலுக்கு சம்மேளனம் அழைப்பு விடுத்தது.
இதனிடையே, குற்றவியல் சட்டத்தின் சட்டப்பிரிவு 377ஏ மீட்டுக் கொள்வதற்கு பத்து பேரில் நான்கு பேருக்கு மேல் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்த வாரம் கருத்தாய்வு ஒன்று கண்டறிந்தது.
தேசிய தினப் பேரணி உரைக்குப் பிறகு பிளேக்பாக்ஸ் ஆய்வு நிறுவனம் கருத்தாய்வை நடத்தியது. அதில் 18 வயதுக்கும் மேற்பட்ட 650 சிங்கப்பூர் பெரியவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 43 விழுக்காட்டினர், சட்டப்பிரிவு 377ஏயை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சட்டப்பிரிவின் ரத்தை எதிர்த்த 21 விழுக்காட்டினரைவிட இது இரட்டிப்பு அதிகம். 34 விழுக்காட்டினர் சட்டப் பிரிவின் ரத்தை எதிர்க்கவோ ஆதரிக்கவோ இல்லை. 35 வயதுக்கும் கீழ் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சட்டப் பிரிவை ரத்து செய்வதை ஆதரித்தனர்.
அதே நேரம், திருமண உறவின் வரையறையைப் பாதுக்காக்க அரசாங்கம் அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரவு தெரிவித்தனர்.
கருத்தாய்வு செய்யப்பட்டவர்களில் 55 விழுக்காட்டினர், ஒத்த பாலீர்ப்புடையவர்கள் திருமணம் செய்துகொள்வதை எதிர்த்தனர்.

