ஆண்டுக்கு 20 மில்லியன் வெள்ளி செலவில் சிங்டெல் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கழகத்தை அமைக்கவுள்ளது.
சிங்டெல் தனது நிறுவன பயிற்சி செயற்குழு குறித்து சிங்கப்பூர் தொலைத்தொடர்பு ஊழியர்கள் தொழிற்சங்கத்துடன் புரிந்துணர்வுக் குறிப்பை நேற்று புதுப்பித்துக்கொண்டது.
ஏற்கெனவே இரண்டும் மூன்று ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்திருந்தன.
நிறுவனப் பயிற்சி செயற்குழுவுக்கு கால வரையறையின்றி ஆதரவளிக்க கடப்பாடு கொண்டிருப்பதாக சிங்டெல் சொன்னது.
புதிய பயிற்சிக் கழகம், வருங்காலத்துக்கு ஆயத்தமான ஊழியர் அணியை உருவாக்க இது உதவும் என்று சிங்டெல் கூறியது.
மேலும், அதிவேக மின்னிலக்கமயத்துக்கு இடையே ஊழியர்கள் வேகமாகச் செயல்பட்டு மாற்றங்களுக்கு ஏற்ப மாறவும் இது உதவும் என்றது நிறுவனம்.
'சிங்டெல் 8ஜார்ஜ்' என்பது புதிய பயிற்சிக் கழகத்தின் பெயராகும். ஊழியர்கள் இணையம் வழியாகவும் நேரடியாகவும் தங்களுக்கு ஏற்ற நேரத்திலும் வேகத்திலும் அதில் கற்க முடியும்.
புத்தம்புதிய தொழில்நுட்பங்கள் பற்றி ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்க சிங்டெல் கடந்த மூன்று ஆண்டுகளில் 45 மில்லியன் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.
அவர்களில் 60 பேரின் பகுதிநேரப் படிப்புக்கான செலவையும் அது ஏற்றுக்கொண்டுள்ளது.
பயிற்சித் திட்டங்களின்வழி 2,500 சிங்டெல் ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் பயிற்சி பெற்ற காலமும் கூடியது.
5ஜி உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் திறன்பயிற்சி பெற்ற பின்னர், கிட்டத்தட்ட 1,500 ஊழியர்கள் தரவுப் பகுப்பாய்வு போன்ற துறைகளில் புதிய பணிகளை மேற்கொண்டதாக சிங்டெல் கூறியது.

