சிங்கப்பூருக்கு ஆற்றிய பங்குக்காக பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒருவரும் சுவிஸ் வர்த்தக அதிகாரி ஒருவரும் தேசிய கௌரவத்தைப் பெற்றனர்.
பிரிட்டனின் சர் டேவிட் லேன், சுவிட்சர்லாந்தின் வால்டர் கியல்ஹோல்ஸ் இருவரும் சிங்கப்பூரின் கௌரவ குடிமக்கள் விருதுகளை நேற்று பெற்றனர். அதிபர் ஹலிமா யாக்கோப் இஸ்தானாவில் விருதுகளை அவர்களுக்கு வழங்கினார்.
கௌரவ குடிமக்கள் விருது சிங்கப்பூர் வெளிநாட்டினருக்கு வழங்கும் ஆக உயரிய விருதாகும். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு உன்னதப் பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு அவை வழங்கப்படுகின்றன.
சர் டேவிட் லேன், 70, ஏ*ஸ்டார் எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு அமைப்பில் கெளரவ மூத்த வல்லுநராக உள்ளார்.
ஏ*ஸ்டாரின் உடற்கூறு, அணு உயிரியல் நிலையத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த அவர், இங்கு மருந்துகளின் உருவாக்கத்துக்கும் மேம்பாட்டுக்கும் பெரிதும் பங்களித்தார். தொழில்துறை முதலீடுகளையும் அறிவியல் திறனாளர்களை இங்கு ஈர்ப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார். 2009ல் ஏ*ஸ்டாரின் தலைமை விஞ்ஞானியாக அவர் நியமிக்கப்பட்டார்.
சுவிஸ் ரே நிறுவனத்தின் தலைவராக இருந்த வால்டர் கியல்ஹோல்ஸ், 71, அந்த நிறுவனம் இங்கு விரிவடைவதைப் பெரிதும் ஊக்குவித்தார்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அனைத்துலக ஆலோசனைக் குழுவில் 2009ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார். அந்தக் குழுவில் மிக நீண்ட காலம் சேவையாற்றியவர் களில் அவரும் ஒருவர்.

