செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
10cb32ad-f5a4-4a4e-adbd-009aca60bb1c
-

தோக்கியோவில் இரு ஹோட்டல்களை திறக்கும் பான் பசிஃபிக் குழுமம்

சிங்கப்பூரின் பான் பசிஃபிக் ஹோட்டல் குழுமம், தோக்கியோவின் முக்கியமான ஷின்ஜுக்கு வட்டாரத்தில் அடுத்த ஆண்டு இரண்டு புதிய ஹோட்டல்களைத் திறக்கவுள்ளது.

ஷின்ஜுக்கு வட்டாரத்தைப் புதுப்பிக்கும் மறுமேம்பாட்டு திட்டத்தின் பகுதியாக அந்த ஹோட்டல்கள் கட்டப்படும்.

மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இரவுநேர கேளிக்கை, கடைத் தொகுதிகள், அலுவலகங்கள் போன்றவை கட்டப்படும். அங்கு அமையவுள்ள 48 மாடிக் கட்டடத்தில் பான் பசிஃபிக் அதன் ஹோட்டல்களைத் தொடங்கும்.

பெலுஸ்டார் தோக்கியோ, ஹோட்டல் க்ரூவ் ஷின்ஜுக்கு என்று அவை பெயர் கொண்டிருக்கும். கட்டடம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் திறக்கப்படலாம்.

ஜப்பான், பயணிகளுக்கான அதன் கொவிட்-19 விதிமுறைகளைத் தளர்த்தியதால் பயணத் துறையில் தேவை பெருகவுள்ளதாகவும் அதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் பான் பசிஃபிக் கூறியது.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு

அறிவுசார் சொத்துரிமை வழிகாட்டிகள்

அறிவுசார் சொத்துரிமை வழியாக தங்கள் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நிபுணத்துவ உதவிகள் பெறவுள்ளன.

இது குறித்து உலக அறிவுசார் சொத்து அமைப்பு, சிங்கப்பூர் உற்பத்தித் துறை சம்ளேனம், சிங்கப்பூர் புத்தாக்க, உற்பத்தித் திறன் கழகம் ஆகியவை நேற்று முன்தினம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதன்வழி, இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் முன்னோடித் திட்டம் தொடங்கப்படும். அதில் சிங்கப்பூர் உற்பத்தித் துறை சம்மேளனத்தில் உள்ள 57 நிறுவனங்கள் கலந்துகொள்ளும். அந்நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை பற்றி உலக அறிவுசார் சொத்து அமைப்பு, சிங்கப்பூர் புத்தாக்க, உற்பத்தித் திறன் கழகம் உருவாக்கியுள்ள வழிகாட்டிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். வர்த்தக நோக்கில் தங்கள் அறிவுசார் சொத்துரிமை எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள இந்த வழிகாட்டிகள் உதவும்.