சிறப்புத் தேவையுடையோருக்கு வேலை கிடைப்பதில் நிறுவனங்களுக்கு ஆக முக்கியப் பங்கு இருப்பதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
கூடுதலான சிறப்புத் தேவைஉடையோருக்குத் தொடர்ந்து வேலை கிடைப்பதை உறுதிசெய்ய நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு எடுக்கவேண்டும். சமூகத்திற்கு நன்மை செய்வதற்கோ தேவைப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கோ மட்டுமின்றி சிறப்புத் தேவையுடையோரை வேலைக்கு எடுப்பதில் உள்ள நற்பலன்களை நிறுவனங்கள் உணரவேண்டும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் ஆக அதிகமானோருக்கு வேலை தரும் துறைகளில் ஒன்றான அரசாங்கத் துறை அனைவரையும் உள்ளடக்கிய வேலை நியமன அணுகுமுறையைப் பின்பற்றுவதைத் திரு வோங் சுட்டினார். கூடுதல் நிறுவனங்களை அனைவரையும் உள்ளடக்கும் வேலை நியமன அணுகுமுறையைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். ஆதரவு வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் திரு வோங் சொன்னார்.
"அரசாங்கம் அதனால் முடிந்த எல்லா உதவியையும் செய்யும்," என்றார் அவர்.
"நமது சட்டங்கள், திட்டங்கள், நிறுவனங்களுக்கு எங்களால் வழங்கக்கூடிய உதவி ஆகியவற்றை தொடர்ந்து மறுபரிசீலனை செய்வோம்," என்று திரு வோங் கூறினார். மீடியாகார்ப்பின் அரங்கில் நடைபெற்ற 'இன்குளுசிஃப் பிஸ்னஸ் ஃபாரம்' எனும் அனைவரையும் உள்ளடக்குவது தொடர்பிலான வர்த்தக மாநாட்டில் திரு வோங் பேசினார்.

