லாரி மோதி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி மரணம்
லாரி மோதி 72 வயது போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இவ்வாண்டு வேலையிடத்தில் நிகழ்ந்துள்ள 34வது மரணம் இது.
ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று லிம் சூ காங் வட்டாரத்தில் விபத்து நேர்ந்தது. முக்கிய சாலைக்கு திரும்புவதற்காக லாரி பண்ணையின் முன்வாசலில் நின்றுகொண்டிருந்தது.
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி, லாரி ஓட்டுநரின் கவனத்தைப் பெற வாகனத்தின் இடது புறம் சென்றார். அங்கிருந்து லாரியின் முன்புறத்துக்குச் சென்றார்.
அப்போது வாகனம் முன் நகர்ந்து அதிகாரியை மோதியது. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அதிகாரி அங்கு உயிரிழந்தார்.
குழந்தையைத் தாக்கிய பணிப்பெண்
தனது பொறுப்பில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தையை ஒரு பணிப்பெண் தாக்கியிருக்கிறார். பணிப்பெண் தனது குழந்தையைத் தாக்கியதை அவரின் முதலாளி கண்காணிப்பு கேமராவின் மூலம் நேரலையில் பார்த்திருக்கிறார்.
29 வயது ஸ்ரீ எஹா சந்திகா சரீ எனும் அந்தப் பணிப்பெண் முதலில் குழந்தையைத் தாக்கியதை மறுத்தார். ஆனால் முதலாளியான 44 வயது ஆடவர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளிகள் அனைத்தையும் காட்டியவுடன் தவறை ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீக்கு நேற்று 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குழந்தையைத் தாக்கிய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
டெரி சூவிற்குப் பின்னடைவு
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி தலைமைச் சட்ட அதிகாரி தன் மீது விசாரணை மேற்கொள்வதை நிறுத்த டிஓசி எனும் 'தி ஆன்லைன் சிட்டிஸன்' ஊடகத்தின் தலைவர் டெரி சூ மேற்கொண்ட முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
சிங்கப்பூரின் நீதித் துறையை விமர்சித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலி ஓ'கொனர் எனும் ஏழுத்தாளர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை 'தி ஆன்லைன் சிட்டிஸன்' வெளியிட்டதைத் தொடர்ந்து தலைமைச் சட்ட அதிகாரி, நீதிமன்றத்தை அவமதித்ததாக சூ மீது சென்ற ஆண்டு விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினார்.
தாய்லாந்து கடற்படைத் தலைவருக்கு உயரிய சிங்கப்பூர் ராணுவ விருது
தாய்லாந்தின் கடற்படைத் தலைவரான அட்மிரல் சொம்பிராசொங் நில்சாமாய்க்கு பிரசித்திபெற்ற மெச்சத்தக்க சேவை (ராணுவம்) விருது வழங்கப்பட்டுள்ளது. அதிபர் ஹலிமா யாக்கோப் இந்த விருதை நேற்று இவருக்கு வழங்கினார்.
விருது வழங்கும் சடங்கு தற்காப்பு அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

