சிங்கப்பூரில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் சொத்து முகவர் மோசடிகளில் $3.9 மில்லியனை இழந்துள்ளனர். இத்தகைய மோசடிகளில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 977 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
வாடகை வீட்டை தேடுபவர்களிடம் சொத்து முகவர்கள் போன்று மோசடிக்காரர்கள் நடிப்பர். வீட்டை ஒருமுறைகூட காட்டுவதற்கு முன் அதற்கான வாடகையை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கின்றனர்.
இணையப்பக்கங்களில் வீட்டு வாடகை விளம்பரங்களைப் பார்த்து அதில் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்பும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்வர். பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையை பெற மோசடிக்காரர் தன்னுடைய வர்த்தக அட்டையையும் வாடகை வீட்டின் படங்கள், காணொளிகள் ஆகியவற்றையும் அனுப்புவார்.
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் தகவல்களை பெற்றுக்கொண்டு வாடகை ஒப்பந்தம் தயாரிக்கப்படும். வாடகை வீட்டை பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டால், வீட்டு உரிமையாளருக்கு நேரம் இல்லை போன்ற சாக்குப்போக்குகள் கூறப்படும்.
வீட்டு உரிமையாளர் என்று நம்பப்படும் ஒருவரின் பெயரும் அடையாள அட்டை விவரங்களும் பாதிக்கப்பட்டவருக்கு அனுப்பப்படும். வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, வாடகை வைப்பு தொகையை தங்களுக்கு அனுப்பும்படி மோசடிக்காரர்கள் கேட்டுக்கொள்வர். பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு மோசடிக்காரர்கள் தங்களுடனான தொடர்பை துண்டிப்பர். அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிய வருகிறது.
இத்தகைய மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சொத்து முகவரின் விவரத்தை சொத்து முகவர் மன்ற இணையப்பக்கத்தில் சோதிக்குமாறு பொதுமக்களை காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

