சிங்கப்பூரில் குறைந்தது 997 பேர், சொத்து முகவர்கள் போல நடித்த மோசடிக்காரர்களிடம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 3.9 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளனர்.
காவல்துறை இதை நேற்று தெரிவித்தது. உண்மையான சொத்து முகவர்கள் போல நடிக்கும் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக காவல்துறை நேற்று தெரிவித்தது. வாடகை வீட்டைச் சென்று பார்க்கும் முன்னர் வீட்டைத் தக்கவைப்பதற்காக பாதிக்கப்பட்டவர் களிடம் மோசடிக்காரர்கள் பணத்தைக் கேட்டுப் பெறுகின்றனர்.
இணையத்தில் உள்ள வாடகை வீட்டு விளம்பரங்களைப் பார்த்து அதிலுள்ள வாட்ஸ்ஆப் எண்களைப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்வது வழக்கம்.
தங்கள் உண்மைத்தன்மையை காண்பிக்க மோசடிக்காரர்கள், உண்மையான சொத்து முகவரின் வர்த்தக அட்டை, வாடகை வீட்டின் புகைப்படம், காணொளி போன்றவற்றை அனுப்புவர்.
வாடகை ஒப்பந்தத்தைத் தயாரிக்க பாதிக்கப்பட்டவரின் விவரங்களை அவர்கள் கேட்டுப் பெறுவர்.
பின்னர், வீட்டைப் பார்க்க வேண்டும் என்று கூறுவோரிடம் சாக்குப்போக்கு சொல்லிவிட்டு போலி வாடகை ஒப்பந்தத்தை மோசடிக்காரர்கள் அனுப்பி வைப்பர்.
பல்வேறு காரணங்கள் கூறி, வீட்டைத் தக்கவைத்துக் கொள்ள பணம் செலுத்தும்படி பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் கூறுவர்.
மோசடிக்காரர்களைத் தொடர்பு கொள்ள முடியாது போகும்போது அல்லது உண்மையான சொத்து முகவரை வேறு வழிகளில் தொடர்பு கொள்ளும்போதுதான் தாங்கள் ஏமாந்தது பாதிக்கப்பட்டோருக்குத் தெரிய வரும்.
முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஒரு வீட்டுக்கான விளம்பரம் உண்மையா என்று முன்செரிக்கையாக சரிபார்க்கும்படி காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.
சொத்து முகமைககள் மன்ற இணையத்தளத்தில் உள்ள பொது பதிவேட்டில் சொத்து முகவரின் எண்கள் இருக்கும். அவற்றைத் தொடர்புகொண்டு சொத்து முகவர் உண்மையானவரா என்று சரிபார்க்கலாம் அல்லது அவர் சொத்து முகமையை அழைத்தும் சரிபார்க்கலாம் என்று காவல்துறை கூறியது.