செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
18e845e3-8d19-4b73-8aa5-15fc32d979e1
-

ஹவ்காங் சாக்கடையில் முதியவர் சடலம்: மரண விசாரணை தொடங்கியது

டெஃபு லேன் ஏழு அருகே கனரக வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையைப் போக்கிக் கொள்ள சென்ற ஆடவர் ஒருவர், முதியவர் ஒருவரின் சடலத்தை சாக்கடையில் கண்டார்.

மூன்று நாள்களாகக் காணாமல் போயிருந்த 80 வயது வில்லியம் லெக் சுவீ சுவாவின் சடலம் அது.

அவருக்கு மறதி நோய் இருந்ததாகவும் அவர் ஜனவரி 3ஆம் தேதி ஹவ்காங் வட்டாரத்தில் காணாமல் போனதாகவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு லெக்கின் மரணத்தின் தொடர்பில் மரண விசாரணை நேற்று தொடங்கியது.

விசாரணையில் சாட்சியம் அளித்த விசாரணை அதிகாரி ஃபிரெடி டான், கொலை நடந்திருக்கும் வாய்ப்பில்லை என்று கூறினார். திரு லெக்கின் மரணம் தற்செயலாக நடந்திருக்கலாம் என்றார் திரு டான்.

கார் நிறுத்துமிடத்துக்குள் திரு லெக் ஏழு முறை உள்ளேயும் வெளியேயும் நடந்து சென்றார் என்றும் கடைசியாக அவர் சாக்கடையை நோக்கி திரும்பியதையும் கண்காணிப்புக் கருவிகளின் காணொளிகள் காட்டின.

261 பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்

261 பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகளையும் அவற்றை மறைத்து வைக்க பயன்படுத்தப்பட்ட பத்து காலி கணினிப் பெட்டிகளையும் சிங்கப்பூர் சுங்கத் துறை கைப்பற்றியுள்ளது.

அதன் தொடர்பில் 35 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சுமார் $22,280 சுங்க வரியும் $1,770 பொருள் சேவை வரியும் செலுத்தப்படாமல் ஏய்க்கப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத் துறை நேற்று தெரிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை உபி ரோடு மூன்றில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரில் ஆடவரும் பழுப்புநிறப் பெட்டிகளும் இருந்ததை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டனர். சோதித்தபோது 258 பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரது வீட்டில் மேலும் சில சிகரெட் பெட்டிகளுடன் கணினிப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கணினிப் பெட்டிகளைப் பெற்று அவற்றில் இருந்த கள்ள சிகரெட்டுகளை சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் கொண்டுசேர்க்கும்படி சமூக ஊடக தகவல் தளத்தில் ஆடவருக்கு பணிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். வழக்குவிசாரணை தொடர்கிறது.

கழிவறையில் ஆணை மானபங்கம் செய்த பல்கலைக்கழக மாணவர்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், வேறொருவரை மானபங்கம் செய்ததாக நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த வாங் யாவ்ஃபெங், 23, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில், கழிவறை இருக்கையில் நின்றுகொண்டு பக்கத்தில் இருந்த அறையில் எட்டிப் பார்த்தார் என்றும் அப்போது அங்கு ஓர் ஆடவர் இருந்தார் என்றும் கூறப்பட்டது.

வாங் மீது கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவருக்கு 10,000 வெள்ளி பிணை நிர்ணயிக்கப்பட்டது.

வாங் இரண்டு பள்ளித் தவணைகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றும் நீதிமன்றத் தீர்ப்புக்கும் தண்டனை விதிப்புக்கும் பிறகு அவரது மாணவர் தகுதி மேலும் மறுபரிசீலிக்கப்படலாம் என்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

கிளார்க் கீயில் தாக்கிய கும்பல்: வழக்கிலிருந்து இளையர் விடுவிப்பு

கிளார்க் கீயில் கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் பங்கெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இளையர் குற்றமற்றவர் என்று இப்போதைக்குக் கருதப்பட்டதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நூர் ஷா ரிஸ்கா அஸ்மான், 20, மூன்று பேருடன் சேர்ந்து ஜஸ்டிக் யோங் ஜியே, 30, என்பவரை கண்ணாடி போத்தலைக் கொண்டு வேண்டுமென்றே தாக்கி அவருக்கு மோசமான காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டிருந்தது.

அவ்வாறு வழக்கிலிருந்து தற்போது விடுவிக்கப்படுவோருக்கு குற்றத்துடன் தொடர்புள்ளதாக ஆதாரமோ சாட்சியோ பின்னர் கிடைத்தால், அவர்மீது மீண்டும் குற்றம் சுமத்தப்படலாம்.