சிங்கப்பூரில் பயனீட்டாளர்கள் தங்கத்தை வாங்குவது அதிகரித்துள்ள தாக உலகத் தங்க மன்றம் வெளி யிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரி வித்துள்ளன.
இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில், ஆண்டு அடிப்படையில் 43 விழுக்காடு உயர்ந்து, 3.8 டன் தங்கம் விற்பனை ஆனது. ஒப்புநோக்க 2021ன் இரண்டாவது காலாண்டில் 2.7 டன் தங்கம் விற்கப்பட்டது.
தங்க நகைக்கான தேவை அதிகரித்ததும் தங்கக் கட்டிகள், தங்கக் காசுகள் ஆகியவற்றின் மீது பயனீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதும் பயனீட்டாளர் தேவை அதிகரித்ததற்குக் காரணம் என்று உலகத் தங்க மன்றம் தெரிவித்தது.
தங்க நகைகளைப் பொறுத்த மட்டும், அவற்றுக்கான தேவை, 2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1.7 டன்னாக இருந்தது. ஆனால் இவ்வாண்டின் காலாண்டில் தங்க நகைகளுக்கான தேவை 2.4 டன்னாகக் கூடியது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒரு டன் எடையுள்ள தங்கக் கட்டிகளும் காசுகளும் விற்கப்பட்டன. ஒப்புநோக்க இந்த ஆண்டின் அதே காலக்கட்டத்தில் ஒன்றரை டன் தங்கக் கட்டிகளும் காசுகளும் விற்பனை ஆயின.
கொவிட்-19 பரவல் தொடங்கியதும், தங்கம் பிரச்சினைகளில் பாதுகாப்பு தரும் சொத்து என்பதை அதிகமானோர் உணர்ந்ததாக லிட்டில் இந்தியாவில் நகைக் கடையை நடத்தும் முகம்மது ஜெஹபார் சாதிக் கூறினார்.
"தங்கத்தை எந்நேரத்திலும் வாங்கலாம், விற்கலாம். இதற்கான சந்தை எப்போதும் இருக்கும். ரொக்கம் தேவைப்பட்டால் விற்பது சுலபம். தங்கம் நிலையானது, பாதுகாப்பானது," என்றார் திரு சாதிக்.
ஆண்கள் தங்கக் கட்டிகளையும் காசுகளையும் பெண்கள் பெரும்பாலும் நகைகளையும் வாங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர்களே தமது கடையில் அதிகம் தங்கம் வாங்குவதாகவும் 20 அல்லது 30 வயதுள்ளவர்கள் மிக அரிதாகத்தான் தங்கம் வாங்குவ தாகவும் திரு சாதிக் கூறினார்.
கொவிட்-19 பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் 2020ல் முடிந்ததும் தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்தது. அதே போல ரஷ்யா உக்ரேனை முதன்முதலில் தாக்கியபோதும் தங்க விற்பனை கூடியதை கவனித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் சிறிய நகைகளை வாங்கிச் செல்வதாகவும் சில நேரங்களில் பாதுகாப்பு கருதி அவரிடமே தங்கத்தை ஒப்படைப்பதாகவும் திரு சாதிக் சொன்னார்.
தென்கிழக்காசியாவிலும் தங்கத்துக்கான பயனீட்டாளர் தேவை இந்த ஆண்டின் முதல் பாதியில் அதிகமானது.
தங்க விலை குறைந்ததும் சம்பளங்கள் உயர்ந்ததும் விழாக்காலத்தில் வாங்கும் போக்கு அதிகரித்ததும் தங்கவிலை உயர்ந்ததற்கு சில காரணங்கள் என்று உலகத் தங்க மன்றம் கூறியது.
நெருக்கடி காலங்களில் தென் கிழக்காசியாவில் உள்ள பயனீட்டாளர்கள் அதிகத் தங்கத்தை வாங்குவது வழக்கம்தான் என்று எஸ்இ ஏஷியா கன்சல்ட்டிங் நிறுவனத்தின் ஸ்பென்சர் கேம்ப்பெல் கூறினார்.
பணவீக்க உயர்வு, தைவான் விவகாரத்தால் ஆசியாவில் அதிகரித்துள்ள பதற்றம், நீளும் ரஷ்யா உக்ரேன் போர், ஆசிய நாணயங்களின் மதிப்பு இழப்பு ஆகியவை தங்கத்துக்கான தேவை உயர காரணங்கள் என்றார் அவர். தங்கத்தில் தான் அதிகப் பாதுகாப்பு என்று பலர் கருதுவதாக திரு கேம்ப்பெல் தெரிவித்தார்.

