விதிகள் தளர்ந்தாலும் முகக்கவசம் உங்கள் விருப்பமாகட்டும்

விதிகள் தளர்ந்தாலும் முகக்கவசம் உங்கள் விருப்பமாகட்டும்

4 mins read
962dad2a-c694-4aac-a43d-837c002d9eee
-

கொவிட்-19 கிருமி உல­கத்­தை­விட்டு இன்­ன­மும் ஒழி­ய­வில்லை. அதன் தாக்­கம் குறைந்து இருக்­கிறது என்­றா­லும் அந்­தக் கிருமி விஸ்­வ­ரூ­பம் எடுத்து மீண்­டும் தலை­வி­ரித்து ஆடுமா அல்­லது முத­லும் முடி­வு­மாக உலகை விட்டு விடை­பெ­றுமா என்­பது ஐய­மாகவே இருக்­கிறது.

ஆனால் ஒன்று நிச்­ச­யம். அந்­தக் கிருமி அடியோடு ஒழி­யும் என்­ப­தற்­கான வாய்ப்பு இருப்­ப­தா­கத் தெரியவில்லை. ஆகை­யால் கொரோ­னா­வோ­டு­தான் இனி காலம்­தள்­ள­வேண்டி இருக்­கும் என்ற நிலைக்கு உல­கம் வந்­து­ இருக்கிறது.

இது­தான் உண்மை நில­வ­ரம் என்­பதை நன்கு உணர்ந்­து­கொண்டு அதற்­குத் தோதான ஒரு நிலையைப் படிப்­ப­டி­யாக எட்ட நாடு­கள் முயன்று வரு­கின்­றன. இதைப் பொறுத்­த­வரை மற்ற நாடு­களை விட சிறந்த நிலை­யில் சிங்­கப்­பூர் உள்ளது.

கொரோனா கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த அரசாங்­கம் உட­னுக்­கு­டன் பொருத்தமான நட­வடிக்­கை­களை தீவி­ர­மாக எடுப்­ப­தும் அத்­த­கைய நட வடிக்கை­களுக்­கான தேவைகளைப் புரிந்­து­கொண்டு, விதிகளை, கட்­டுப்­பா­டு­க­ளைக் கடைப்­பி­டித்து கடமை உணர்­வு­டன், பொறுப்புடன் நடந்­து­கொண்டு அர­சாங்­கத்­திற்­குப் மக்­கள் அளித்துவரும் ஒத்துழைப்பும்­தான் இதற்­குக் கார­ணம்.

இந்த ஒத்­து­ழைப்பு கார­ண­மாக கொவிட்-19 கிரு­மியை மட்­டு­மல்ல; அது போன்ற வேறு வகை கிருமி ஏதே­னும் தொற்­றி­னால் அதை­யும் தவிர்த்துக்கொள்ள வகை செய்­யும் நோய்த்­த­டுப்பு ஆற்­ற­லு­டன் சிங்­கப்­பூர் சமூ­கம் இப்­போது திகழ்­கிறது. சிங்­கப்­பூ­ரில் முதி­யோர், இளையோர் என மக்கள் அனைவரும் தடுப்­பூ­சியை, பிறகு காப்­பூ­சியைப் போட்­டுக்­கொண்டு கிரு­மியை எதிர்க்­கும் ஆற்­றலை தங்­கள் உட­லில் பலப்­படுத்திக்கொண்டு இருக்­கி­றார்­கள்.

கொவிட்-19க்கு தொற்­றுக்கு எதி­ரான போராட் டத்தைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூர் வெற்றி மீது வெற்றி பெற்று வரு­கி­றது. வெற்றி கிடைக்க கிடைக்க அதற்கு ஏற்ப கட்­டுப்­பா­டு­களை, விதிகளை மேலும் மேலும் அகற்றி வரு­கிறது. இப்படி கட்­டம் கட்­டமாக முன்­னேறி இப்­போது கொரோனா கிரு­மி­யு­டன் வாழ்­வ­தற்­குத் தோதாக சிங்­கப்­பூர் மேலும் ஒரு படி முன்­னேறி இருக்­கிறது.

ஆகை­யால் எஞ்சி இரு­ந்த கட்­டு­ப்பா­டு­களில் பல­வும் நாளை திங்­கட்­கி­ழமை முதல் தளர்த்­தப்­படு­கின்­றன. இது பற்­றிய அறி­விப்பு சில நாட்­க­ளுக்கு முன் வெளி­யி­டப்­பட்­டது. அதன்­படி, இனி­மேல் பெரும்­பா­லான உட்­புற இடங்­களில் முகக்­க­வ­சம் அணிய வேண்­டிய கட்­டா­யம் இராது.

என்­றா­லும்­கூட சுக­ாதா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், குடி­யி­ருப்புப் பரா­ம­ரிப்பு விடு­தி­கள், மருத்­துவ வாக­னங்­கள், மருத்­து­வ­ம­னை­கள், பல­துறை மருந்­தகங்­கள் ஆகி­ய­வற்­றி­லும் எம்­ஆர்டி, எல்­ஆர்டி ரயில்­க­ளி­லும் பொதுப் பேருந்­து­கள், பேருந்துச் சந்­திப்பு நிலை­யங்­களில் பேருந்து ஏறும் இடங்­கள், எம்­ஆர்டி ரயில் நிலைய நடைமேடை­கள் போன்ற உட்புற இடங்­க­ளி­லும் முகக்­க­வ­சம் அணிய வேண்டும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

விமான நிலை­யம், பள்­ளிக்­கூட பேருந்­து­கள், தனி­யார் பேருந்­து­கள், டாக்­கி­கள் போன்­ற­வற்­றில் முகக்­க­வ­சம் அணிவது உங்­கள் விருப்­பம். நீங்­கள் விரும்பினால் முகக்கவசத்தை அணிந்­து­கொள்­ள­லாம். பல கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு இருக்­கின்­றன. கொவிட்-19க்கு முந்­திய சூழல் வேக­மாக திரும்பி வரு­கிறது. கட்­டுப்­பா­டு­களைப் பின்­பற்றி நடக்க வேண்­டிய கட்­டா­யம் குறை­கிறது.

ஆனால், முன்­பை­விட இப்­போது பொது­மக்­களுக்குப் பொறுப்பு கூடு­கிறது என்­று­தான் சொல்ல வேண்­டும். எச்­ச­ரிக்­கை­யோ­டும் பொறுப்­போ­டும் நடந்துகொள்ள வேண்­டிய தேவை முன்­பை­விட இப்­போது முக்­கி­யம் என்­பதை அவர்­கள் மன­தில் பதி­ய­வைத்து செயல்­பட வேண்­டும்.

கூட்­ட­மான இடங்­களில் இருக்­கும்­போது அல்லது எளி­தில் பாதிக்­கக்­கூ­டிய மக்­களை எட்­டும்­போது முகக்­க­வ­சத்தை அணிந்து கொள்­வது நல்­லது.

வேலை­யி­டங்­களில் விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றத்­தான் வேண்­டும். அதே­போல, உண­வ­கங்­க­ளுக்­குச் செல்­லும்­போ­தும் இதர விருந்­தோம்­பல் நிலை­யங்­களுக்­குச் செல்­லும்­போ­தும் வெளியே சாப்­பி­டும் போதும் விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றி நடக்­க­த்தான் வேண்­டும்.

சிங்­கப்­பூர் எல்­லை­க­ளைத் திறந்­து­விட்­டுள்­ளது. பெரும்­பா­லான கட்­டுப்­பா­டு­களை அகற்றி இருக்­கிறது. இதை நினைத்து, நாடு கொவிட்-19ன் கோரப்­பி­டி­யில் இருந்து மீண்­டு­விட்­ட­தாக யாரா­வது முடிவு செய்­தால், அந்த முடிவு தவ­றா­கத்­தான் இருக்­கும்.

கொரோனா கிருமி இன்­னும் ஒழி­ய­வில்லை என்­பதை நாம் அனை­வ­ரும் மன­தில் கொள்­ள­வேண்டும். எந்தச் சூழ்­நி­லை­யில் எது வேண்­டு­மா­னா­லும் நடக்­க­லாம். பொது சுகா­தா­ரம் முன்­பை­விட அனு­கூ­ல­மான சூழ்­நி­லை­யில் இப்­போது இருக்­கிறது.

இருந்தாலும் கொரோனா கிருமி உரு­மாறி புதிய வடி­வில் அது தலை­தூக்­கினால், பொது சுகா­தார வளங்­கள் திடீ­ரென நெருக்­க­டிக்கு உள்­ளா­கும் வாய்ப்பு உருவாகும் என்­பதை நாம் உணர்ந்­து­கொள்ள வேண்­டும். திடீர் மாற்­றங்­கள் நிக­ழ­லாம் என்பதால் அதற்­கேற்ப மன­ரீ­தி­யாகவும் சிங்­கப்­பூ­ரர்­கள்

எப்­போதும் தயா­ராக இருக்­க­வேண்­டும்.

கொரோனா கிருமி எப்­போது, எந்த வடி­வில், எப்­படி மறு­ப­டி­யும் தலை­தூக்­கும் என்­பது தெரி­ய­வில்லை. அப்­படி ஒரு நிலை ஏற்­பட்­டால் அது இலே­சான பாதிப்­பு­க­ளு­டன் போய்­வி­டுமா அல்­லது இது­வரை இருந்­த­தை­விட இன்­னும் பயங்­க­ர­மாக கோரத்­தாண்­ட­வம் ஆடுமா என்­ப­தும் புரி­ய­வில்லை.

இந்த ஆண்டு முடி­வில் வட­து­ருவ நாடு­களில் புதிய வகை கிருமி தலை­தூக்­கும் வாய்ப்பு இருப்­ப­தாக அனு­மா­னிக்­கப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஐரோப்­பிய நாடு­கள் அத்­த­கைய ஒரு சூழ்­நி­லையை எதிர்­நோக்க தங்­களை ஆயத்­தப்­ப­டுத்­திக்கொண்டு வரு­கின்­றன என்­பதை உணர்ந்து நாமும் தயா­ராக வேண்­டும்.

எந்­த­வொரு சூழ்­நி­லை­ ஏற்­பட்­டா­லும் அதை கூடு­மான வரை ஆற்­ற­லு­டன், திற­மை­யு­டன் சமாளித்து கிரு­மிப் பர­வலை ஒழிக்க வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் பல அமைச்­சு­களை உள்­ள­டக்­கிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழுவை அரசு அப்­ப­டியே வைத்து இருக்­கிறது என்­பது இங்கே குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சாங்­கம் தமது பணியை செவ்­வனே செய்து இருக்­கிறது. அதே­போல மக்களும் கட­மை­களைத் தொடர்ந்து நிறை­வேற்றி வர வேண்­டும். குறித்த நேரத்­தில் காப்­பூ­சியை (பூஸ்­டர்) போட்­டுக்­கொள்ள வேண்­டும். கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான போரில் நாம் இது­வரை பெற்­றி­ருக்­கும் வெற்­றியை மன­தில் நிறுத்தி அந்த நம்­பிக்­கை­யு­டன் எத்­த­கைய மிரட்டல் எப்­படி வந்­தா­லும் அதைச் சமா­ளிக்க நாம் உறுதி பூணவேண்டும்.