செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4e1bf093-bbb4-4352-b4e7-ab6d54519d04
-

கைதிகளின் குடும்பங்களுக்கு ஆதரவு தொடர்பாக மதிப்பீடு

அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் சாங்கி சிறைச்சாலைக்குச் செல்லும் அனைத்து புதிய கைதிகளின் குடும்பங்களுக்கு ஆதரவு தேவைப்படுமா என்பது குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு குடும்பச் சேவை நிலையங்களின் உதவி பெற ஏற்பாடு செய்யப்படும்.

குறிப்பாக, சிறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க சிங்கப்பூர் சிறைச் சேவையும் குடும்பச் சேவை நிலையங்களும் இணைந்து செயல்படுகின்றன.

கைதிகள் சிறைக்குச் செல்லும் முதல் ஆறு மாதங்களிலும் கடைசி ஆறு மாதங்களிலும் அவர்களது குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி தேவைப்படுவதாக 2018ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் சிறைச் சேவை நடத்திய முன்னோட்டப் பயிற்சியில் தெரியவந்துள்ளது.

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இலவச சட்டச் சேவை

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் குடியிருப்புப் பேட்டைகளில் இலவச சட்டச் சேவை நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இலவச சட்டச் சேவை நிலையம் ஹவ்காங் வட்டாரத்தில் திறக்கப்படும்.

தியேன் டி கோயிலில் இடம்பெற இருக்கும் இந்த நிலையம் இவ்வாண்டு திறக்கப்படும். இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தின் இலவச சட்டச் சேவைப் பிரிவு, தியேன் டி கோயில், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், ஆர்எஸ்எஸ் அறநிறுவனம் ஆகியவை இம்மாதம் 20ஆம் தேதியன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இத்திட்டத்துக்குத் தேவையான நிதியை ஆர்எஸ்எஸ் அறநிறுவனம் திரட்டும். நடமாட்டம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு சட்டச் சேவையை எளிதில் சென்றடைவதே இத்திட்டத்தின் இலக்கு.

"புதிய நிலையங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் பலதுறை மருந்தகங்கள் அல்லது தனியார் மருந்தகங்கள் போன்று சமூகத்துடன் இவை ஒன்றிணைந்து செயல்பட்டு குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்," என்று மூத்த வழக்கறிஞரும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் இலவச சட்டச் சேவைப் பிரிவின் தலைவருமான திரு கிரெகரி விஜேந்திரன் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொடரும் சட்டச் சேவைகள்

வழக்கறிஞர்கள் சங்கத்தின் இலவச சட்டச் சேவைப் பிரிவின்கீழ் செயல்படும் குற்றவியல் சட்ட உதவித் திட்டம் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் குறைந்த வருமான ஊழியர்களுக்குத் தற்காப்பு வழக்கறிஞர்களை இலவசமாக வழங்கும் இத்திட்டம் சட்ட அமைச்சின் பிரதிவாதி அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து செயல்படும். திட்டத்துக்கு அரசாங்கம் தொடர்ந்து நிதி வழங்கும்.

இவ்வாண்டு இறுதிக்குள் பிரதிவாதி அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் அமைக்கப்படும். குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் இத்திட்டம் முழுநேர தற்காப்பு வழக்கறிஞரை வழங்கும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இவ்வாண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 1,404 பேருக்கு திட்டம் உதவி வழங்கியுள்ளது.

உதவி பெற்றவர்களில் 729 பேருக்கு அவர்களை நீதிமன்றத்தில் பிரதிநிதிக்க வழக்கறிஞர்கள் அனுப்பப்பட்டனர்.

அதிகபட்சம் $1,500 தனிநபர் வருமானம் கொண்ட குடும்பங்கள் இத்திட்டத்துக்குத் தகுதி பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.