$35,000 வாடகை மோசடி
வாடகை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 56 வயது மாது, பலரை 35,000 வெள்ளி வரை ஏமாற்றியிருக்கலாம் என்று நேற்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப் பட்டது. கீதா பிரியா ரவி ஒரு ஏமாற்றுக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். வாடகைக்கு இடம் இருப்பதாகக் கூறி ஏறக்குறைய இருபது சம்பவங்களில் அவர் முன்பணத்தை வாங்கி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
குடியிருப்பு வட்டாரங்களில்
இலவச சட்ட நிலையங்கள்
குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் குடியிருப்பு வட்டாரங்களிலேயே இலவச சட்ட நிலையங்கள் அமைக்கப்படும். இதன் ஒரு பகுதியாக ஹவ்காங்கில் முதல் சட்ட நிலையம் இடம்பெறும். டியன் டி ஆலயத்தில் இவ்வாண்டு இறுதியில் புதிய நிலையம் திறக்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் சங்கத்தின் புரோ போனோ சர்விசஸ், ஆலயம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், ஆர்எஸ்எஸ் அறநிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் புதிய சட்ட நிலையம் அமைக்கப்படுவது சாத்தியமாகியுள்ளது.

