என்டியுசி குழுமம் செப்டம்பர் 1ல் அமலாக்கும்; 10,000க்கும் அதிக ஊழியருக்குப் பலன்
என்யுடிசி ஃபேர்பிரைஸ் குழுமம், சில்லறை விற்பனைத் துறைக்கு மட்டுமின்றி தனது அனைத்து தொழில்துறைகளுக்கும் படிப்படியாக உயரும் சம்பள முறையை முன்னதாகவே நீட்டிக்கிறது.
அதன் உணவுச் சேவைகள் மற்றும் விநியோகக் கட்டமைப்புத் தொழில்துறைக்கு அதற்கான நிபந்தனை நடப்புக்கு வருவதற்கு முன்னதாகவே அந்த முறை அமலாகும் என்று இந்தக் குழுமம் நேற்று அறிவித்தது.
படிப்படியாக உயரும் சம்பள முறை அடுத்த மாதம் முதல் தேதி நடப்புக்கு வருகிறது. இந்தக் குழுமத்தின் தொழில்களிலும் நிறுவன செயல்முறைகளிலும் வேலை பார்க்கின்ற நிர்வாகம் சாராத 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதனால் பலன் அடைவார்கள்.
அப்படி பலன் அடைவோரில் முழுநேர, பகுதிநேர ஊழியர்கள் அடங்குவர். ஊழியர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும் நன்மை கிடைக்கும் என்று குழுமம் தெரிவித்தது. ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தொழில்களில் பேரங்காடிகள், ஃபுட்பேர் மற்றும் கோப்பித்தியாம் உணவு நிலையங்கள் அடங்கும்.
ஃபேர்பிரைஸ் நிறுவனம் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) சமூக நிறுவனமாகும்.
படிப்படியாக உயரும் சம்பளமுறை என்பது, ஊழியர்களின் தேர்ச்சி, பயிற்சி ஆகியவற்றுடன் இணைந்த ஒன்று.
ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்க இந்த முறை உதவும். உணவு சேவை தொழில்துறையில் இந்தச் சம்பள முறை அடுத்த ஆண்டு மார்ச்சில்தான் நடப்புக்கு வருகிறது.
இதுபற்றி சென்ற ஆண்டு கருத்து தெரிவித்த என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், தளவாடப் போக்குவரத்து, வாகன ஓட்டுநர்கள் போன்ற குறிப்பிட்ட தொழில்களுக்கு இந்தச் சம்பள முறை அமலாகும் வகையில் என்டியுசி முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
அத்தகைய சம்பள முறையை நடப்புக்குக் கொண்டுவர நிறுவனங்களுக்கு ஆறு மாதகாலம் அவகாசம் இருக்கிறது. என்றாலும் என்டியுசி முன்னதாகவே அதை நடப்புக்குக் கொண்டு வருகிறது.
பணவீக்கம், செலவு அதிகரிப்பு போன்ற நெருக்கடிகள் இருந்தாலும்கூட என்டியுசி இதைச் செய்கிறது என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி விபுல் சாவ்லா தெரிவித்தார்.
படிப்படியாக உயரும் சம்பள முறை, ஃபேர்பிரைஸ் ஊழியர்கள் வாழ்க்கைத்தொழிலில் மேம்படுவதற்கு தெள்ளத்தெளிவான வழியை வகுத்து தரும்.
அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு உற்பத்தித்திறன் மிக்கவர்களாக திகழ்ந்து அதிக சம்பளத்தைப் பெறுவார்கள் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்தச் சம்பள முறையை நடப்புக்கு கொண்டு வருவதால் தனக்கு மூன்றாண்டு காலத்தில் ஏறத்தாழ $70 மில்லியன் செலவாகும் என்று குழுமம் கூறியது.

