வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவுவதற்காக 'இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்' என்ற அமைப்பு செயல்படுகிறது. அந்த அமைப்பு, வெளிநாட்டு ஊழியருக்காக விளையாட்டு தினத்தை நடத்தியது.
அந்த விளையாட்டு நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டபோது, அவர்களிடம் விளையாட்டுக் காலணிகள் இல்லை என்பது இந்த அமைப்புக்குத் தெரியவந்தது.
உடனடியாக இந்த லாப நோக்க மற்ற அமைப்பு, ஆகஸ்ட 17ஆம் தேதி ஃபேஸ்புக்கில் கோரிக்கை ஒன்றை வெளியிட்டு, வெளிநாட்டு ஊழியருக்கு விளையாட்டுக் கால ணிகளை அன்பளிப்பாக கொடுக்கும்படி கேட்டுக்கொண்டது.
அவற்றை சிங்கப்பூர் முழுவதிலும் வசிக்கும் இந்த அமைப்பின் தொண்டூழியர்கள் வீடுகளில் கொடுக்கலாம் என்றும் அது அறிவித்தது. ஐந்தே நாட்களில் நூற்றுக்கணக்கான ஜோடி காலணிகள் திரண்டன. அவற்றில் புதியவை, பயன்படுத்தப்பட்டவை இருந்தன.
காலணிகள் மலைபோல் குவிந்துவிட்டன என்று இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் அமைப்பைத் தோற்றுவித்த தீபா சுவாமிநாதன், 50, கூறினார். ஏறக்குறைய 50 வெளிநாட்டு ஊழியர்கள் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
ஆகஸ்ட் 21ஆம் தேதி நடந்த விளையாட்டு தினத்தன்று 20 பேருக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அந்தக் காலணிகளை அணிந்துகொண்டு விளையாடினர்.
எஞ்சி இருக்கும் காலணிகள், அப்பர் பாய லேபார் ரோட்டில் செப்டம்பர் 3ஆம் தேதி இந்த அமைப்பு தொடங்க இருக்கும் ஒரு புதிய இடத்தில் (InspIRRe) வைக்கப்படும். அவற்றை வெளிநாட்டு ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அந்த இடத்தில் கைப்பை, மெத்தை, காற்றாடிகள், சாதம் சமைக்கும் சாதனங்கள் போன்ற பொருள்களை நன்கொடையாகத் தரலாம்.

