ஃபார்முலா 1 கார் பந்தயம்:
ஊக்கமூட்டும் ஆதரவு
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் நடக்க இருக்கும் ஃபார்முலா1 கிராண்ட் பிரிக்ஸ் அதிவேக கார் பந்தயத்தை நேரில் காண அதிகம் பேர் வருவார்கள் என்பது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் 2008ஆம் ஆண்டு முதல் அந்தப் பந்தயம் நடந்து வருகிறது. ஆனால் கொவிட்-19 காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அது நடக்கவில்லை. இந்த ஆண்டுதான் நடக்கிறது.
இந்த ஆண்டில் அந்தப் போட்டியைப் பார்க்க ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், அத்தகைய நிகழ்ச்சிகளில் மக்களுக்கு நாட்டம் அதிகமாக இருக்கிறது என்பதையும் அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அதிக தேவை இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது என்றார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் நடந்த தேசிய தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஃபார்முலா1 கிராண்ட் பிரிக்ஸ் சிங்கப்பூர் போட்டி மரினா பே பகுதியில் அக்டோபர் 2ஆம் தேதி நடக்கிறது. போட்டி நடக்கும் அதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 25 இதர முக்கிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
அந்தப் போட்டி முதன்முதலாக 2008ல் நடந்தபோது அதை 300,000 பேர் பார்த்தனர். பிறகு 2019ல் அதைப் பார்த்தவர்கள் 268,000 பேர்.
சமய நல்லிணக்கத்தை மேம்படுத்த கார்டினல் கோ இலக்கு
வத்திகன் நகரில் சனிக்கிழமை நிகழ்ந்த ஒரு கிறிஸ்தவ சமய நிகழ்ச்சியில் போப் ஆண்டவரால் முறையாக பதவியில் அமர்த்தப்பட்ட 20 புதிய கிறிஸ்தவ சமயகுருமார்களில் கார்டினல் வில்லியம் கோவும், 65, ஒருவர். (படம்) இவரே சிங்கப்பூரின் முதலாவது கார்டினல் ஆவார்.
கார்டினல் வில்லியம் கோ, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வத்திகன் நகருக்குப் புறப்படுவதற்கு முன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு ஒரு பேட்டியளித்தார்.
வெவ்வேறான சமயங்களுக்கு இடையே கலந்துரையாடல்களைப் பலப்படுத்தி, அதன் வழியாக ஆசியாவில் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே தனது நோக்கம் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கே உரிய அனைத்து சமய கலந்துரையாடல் பாணியை இந்த வட்டாரம் முழுவதும் பரப்பலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கார்டினல் கோ சிங்கப்பூரின் பேராயரும் ஆவார். அவர், இதர சமயத் தலைவர்களுடன் தோழமை உறவை எவ்வாறு மேம்படுத்துவது என்பதன் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுப் பயிலகம் ஒன்றையும் அமைப்பார்.
சிங்கப்பூரின் முதலாவது கார்டினல் இவர்தான். கார்டினல் என்பவர்கள், போப் ஆண்டவருக்கு அணுக்க மான ஆலோசனையாளர்கள். இவர்கள் வத்திகன் நகரில் ஆக உயரிய நிலையில் உள்ள நிர்வாகத்தினர் என்று கருதப்படுகிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் 20 பேரையும் சேர்த்து 226 கார்டினல்கள் இருக்கிறார்கள்.
சில பலதுறை மருந்தகங்களில் கணினி செயல்பாட்டு பிரச்சினை
சிங்கப்பூரில் சில பலதுறை மருந்தகங்களில் கணினி வன்பொருள் கட்டமைப்புக் கோளாறு காரணமாக தகவல் தொழில்நுட்பச் செயல்பாடு பாதிக்கப்பட்டது.
இதனால் சில நோயாளிகள் குறித்த நேரத்தில் மருத்துவர்களைப் பார்க்க முடியவில்லை.
இதனிடையே, இது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கருத்துரைத்த ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் அமைப்பின் பேச்சாளர், வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கும் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கும் இடையில் கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
சில தகவல் தொழில்நுட்ப செயல்முறைகளைப் பாதித்த கணினி வன்பொருள் கட்டமைப்பில் கோளாறு இருந்தது காலை சுமார் 7.20 மணிக்குத் தெரியவந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
அதே நாளன்று காலை 9.05 மணிக்கும் 10.45 மணிக்கும் இடையில் எல்லாம் சரியாகிவிட்டன என்று கூறிய அந்தப் பேச்சாளர், இதற்காக தாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, அந்தக் கோளாறு காரணமாக தேசிய பல்கலைக்கழக பலதுறை மருந்தகங்களின் கீழ் செயல்படும் ஏழு பலதுறை மருந்தகங்களில் சில மருந்தகங்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

