சிங்கப்பூரில் டாக்சிகள், தனியார் வாடகை கார்கள் உட்பட பெரும்பாலான உட்புறங்களில் முகக்கவசம் அணிவது நேற்றுமுதல் கட்டாயமில்லை.
டாக்சிகளிலும் தனியார் வாடகை கார்களிலும் முகக்கவச விதிமுறை மாற்றம் குறித்து இணையத்தில் மாறுபட்ட கருத்துகள் கூறப்பட்டன.
முன்னதாக, முகக்கவசம் அணியாதோரை வாகனத்திற்குள் அனுமதிக்க ஓட்டுநர்கள் மறுக்கலாம். ஆனால், இப்போது முகக்கவசம் அணிவதும் அணியாமல் இருப்பதும் பயணிகளின் விருப்பம்.
நேற்றுக் காலை தங்கள் கார்களில் ஏறிய பயணிகளில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் முகக்கவசம் அணிந்திருந்ததாக ஓட்டுநர்கள் கூறினர்.
காலப்போக்கில் கூடுதலான பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருப்பதை ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முகக்கவசம் அணியாமல் இருப்பது வழக்கமாகும்போது, தங்களது விருப்பத்தைப் பற்றி குறிப்பிடுவது அசௌகரியமாக இருக்கும் என்பதே ஓட்டுநர்களின் கவலை.
முகக்கவசம் அணிவதற்கான விதிமுறையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது குறித்து கிராப், கோஜெக் நிறுவனங்கள் பயணிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.
குறிப்பாக பயணிகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அவர்கள் முகக்கவசம் அணிவதை தான் ஊக்குவிப்பதாக கோஜெக் கூறியது.
பயணிகள் முகக்கவசம் அணிய விரும்பினால் அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்யலாம் என்று கிராப் சொன்னது.
ஓட்டுநர் முகக்கவசம் அணிந்து இருக்கவில்லை என்றால் பயணத்தை ரத்து செய்வதற்கான தெரிவும் அதன் செயலியில் வழங்கப்படுகிறது.
ஓட்டுநர்களும் பயணிகளும் புதிய நடைமுறைக்குப் பழகிவரும் வேளையில், ஒருவர் முகக்கவசம் அணிந்திருந்தால் மற்றொருவரும் அதை அணிய வேண்டும் என்ற இணக்கம் எட்டப்பட வேண்டும் என்று ஓட்டுநர்கள் சிலர் கூறினர்.
டாக்சிகளிலும் தனியார் வாடகை கார்களிலும் ஏறும்போது ஓட்டுநர் தங்களை முகக்கவசம் அணியச் சொன்னால் தாங்கள் அதற்கு இணங்கி நடக்கத் தயார் என்றும் பயணிகள் பலர் கூறினர்.

