செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
af760f95-fff7-401f-b98b-be02c5c20604
-

பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்றம்

சிங்கப்பூரில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. ஷெல், கால்டெக்ஸ் நிலையங்களில் கடந்த புதன்கிழமை டீசல் விலை லிட்டருக்கு ஏழு காசும் பெட்ரோல் விலை மூன்று காசும் உயர்ந்தன.

எஸ்ஸோ, சினோபெக் நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருள் விலைகளை உயர்த்தியதைத் தொடர்ந்து, எஸ்பிசி நிறுவனம் அதன் விலைகளை நேற்று உயர்த்தியது.

டீசல் லிட்டருக்கு $2.87க்கும் (சினோபெக்) $2.89க்கும் (ஷெல், கால்டெக்ஸ்) விற்கப்படுகிறது.

கால்டெக்ஸ், எஸ்ஸோ, எஸ்பிசி நிலையங்களில் 92-ஆக்டேன் ரக பெட்ரோல் லிட்டருக்கு $2.83க்கு விற்கப்படுகிறது. ஷெல், சினோபெக் நிலையங்களில் இந்த ரக பெட்ரோல் விற்கப்படுவதில்லை.

எஸ்பிசி, சினோபெக் நிலையங்களில் 95-ஆக்டேன் ரக பெட்ரோல் $2.87க்கு விற்கப்படுகிறது. மற்ற நிலையங்களில் அது $2.88க்கு விற்கப்படுகிறது. 98-ஆக்டேன் ரக பெட்ரோல் ஷெல் நிலையங்களில் $3.37க்கும் மற்ற நிலையங்களில் $3.35க்கு விற்கப்படுகிறது.

98-ஆக்டேன் உயர் ரக பெட்ரோல் சினோபெக் நிலையங்களில் $3.48க்கும் கால்டெக்ஸ் நிலையங்களில் $3.54க்கும் ஷெல் நிலையங்களில் $3.59க்கும் விற்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைகள் அதற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்ற மாநாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் இழப்பும் சேதமும்

தென்கிழக்காசியாவில் அண்மைக்காலமாக மோசமான வானிலை நிகழ்வுகள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இவ்வேளையில், வரும் நவம்பரில் 'சிஓபி27' ஐக்கிய நாட்டு பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்ளும் வெவ்வேறு நாட்டுத் தலைவர்கள், இவற்றால் ஏற்பட்டுள்ள இழப்புக்கும் சேதத்துக்கும் இந்த வட்டாரத்திற்கு இழப்பீட்டைப் பெற்றுத் தருவதில் உடன்பாட்டை எட்டுவார்கள் என கவனிப்பாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தென்கிழக்காசியாவில் அண்மைய மாதங்களில் மோசமான வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்ட நாடுகளில் மலேசியாவும் பிலிப்பீன்சும் அடங்கும். இவ்வாண்டு முன்னதாக, மலேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உள்கட்டமைப்புகளுக்கு 6.1 பில்லியன் ரிங்கிட் (S$1.9 பி.) மதிப்பில் பெருத்த சேதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பிலிப்பீன்சைப் புரட்டிப் போட்ட புயல் காற்று, 28.6 பில்லியன் பெசோ (S$709.2 மில்லியன்) மதிப்பில் சேதத்தை ஏற்படுத்தியது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்கை சார்ந்த பருவநிலை தீர்வுகள் நிலையத்தின் பருவநிலைக் கொள்கை கவனிப்பாளரான திருவாட்டி மெலிசா லோ, பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகள் அதற்குரிய இழப்பீட்டைப் பெறுவதற்கும் மேலான பலனை இந்த உடன்பாடு வழங்கும் எனக் கருதுகிறார்.

மோசமான வானிலை நிகழ்வுகள் விவசாய பயிர் விளைச்சலைப் பாதிக்கக்கூடும். இதனால் பொருளியல் இழப்பும் சேதமும் ஏற்படக்கூடும்.

விருந்தோம்பல், பயணத்துறை மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்

விருந்தோம்பல், பயணத்துறைகளில் பயிலும் 100க்கும் அதிகமான சிங்கப்பூர் மாணவர்கள் அடுத்த ஆண்டிலிருந்து US$1 மில்லியன் (S$1.4 மி.) பெறுமானமுள்ள உபகாரச் சம்பளத்தின் மூலம் பலன் பெறலாம்.

மரினா பே சேண்ட்சும் அதன் பிரதான நிறுவனமான லாஸ் வேகஸ் சேண்ட்சும் இந்த உபகாரச் சம்பளத்தைத் தொடங்கி வைத்தன. இங்குள்ள ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளுடனும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்துடனும் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் லாஸ் வேகஸ் சேண்ட்ஸ் நேற்று கையெழுத்திட்டது.

சேண்ட்ஸ் விருந்தோம்பல் உபகாரச் சம்பளத் திட்டம், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு இடம்பெறும். மேற்கூறப்பட்ட ஆறு உயர் கல்வி நிலையங்களில் விருந்தோம்பல், பயணத்துறை தொடர்பான பாடங்களைப் பயிலும் இரண்டாமாண்டு மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பலதுறைத் தொழிற்கல்லூரியிலும்

19 மாணவர்களும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்களும் இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம்.