நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமது முன்னாள் காதலன் மீது வெந்நீரை ஊற்றிக் காயப்படுத்திய பெண்ணுக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஆடவருக்கு நீரிழிவுநோய் இருந்ததால் அவர் மீது வெந்நீர் ஊற்றப்பட்டதை அடுத்து மிக மோசமான காயங்களும் தழும்புகளும் ஏற்பட்டிருக்கக்கூடும்.
ஆனால் அந்த ஆடவரைப் பரிசோதித்த மருத்துவர் அவருக்கு இருந்த நீரிழிவுநோய் காயங்களை மோசமாக்கவில்லை என்று தெரிவித்தார்.
முன்னாள் காதலனைத் தாக்கியதை 25 வயது ஷசிலா அக்பர் பாட்சா நேற்று ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதியன்று மார்சிலிங் வட்டாரத்தில் உள்ள தமது நண்பரின் வீட்டுக்கு ஷசிலா சென்றபோது தற்செயலாக அந்த 31 வயது ஆடவரை அந்த வீட்டுக்கு வெளியே பார்த்தார்.
நண்பரின் வீட்டுக்கு அருகில் உள்ள படிக்கட்டுகளில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆடவரின் இடது கன்னத்தில் ஷசிலா அறைந்தார்.
அதையடுத்து, இருவரும் நண்பரின் வீட்டுக்குள் நுழைந்தனர்.
ஆனால் வாக்குவாதம் நின்றபாடில்லை.
ஷசிலாவுக்கு அவரது குழந்தையைப் பார்த்துக்கொள்ளத் தெரியவில்லை என்று அந்த ஆடவர் கூறியதைக் கேட்டு சமையலறைக்குச் சென்று பிளாஸ்டிக் குவளையில் வெந்நீரை எடுத்துக்கொண்டு வந்து அவர் மீது ஊற்றினார் ஷசிலா.
மறுநாள் மருந்தகத்துக்குச் செல்வதற்கு முன்பு அந்த ஆடவர் காவல்துறையிடம் புகார் செய்தார். அவருக்கு மூன்று நாள்கள்
மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

