மின்னிலக்க நாணயங்களை வாங்குவதை கட்டுப்படுத்த திட்டம்
மின்னிலக்க நாணயங்களைப் பொதுமக்கள் வாங்குவதைக் கட்டுப்படுத்துவது குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக அதன் நிர்வாக இயக்குநர் திரு ரவி மேனன் தெரிவித்துள்ளார். ஆனால் அத்தகைய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
பணத்துக்குப் பதிலாக மின்னிலக்க நாணயங்களைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று ஆணையம் கருதுகிறது. குறிப்பாக, சில்லறை வர்த்தக முதலீட்டாளர்களுக்கு அது மிகவும் ஆபத்தானது என்று அது எச்சரித்தது.
பேருந்து விபத்தில் மூதாட்டி பலி
தியோங் பாரு வட்டாரத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 80 வயது மூதாட்டி மரணம் அடைந்தார். இந்த விபத்து நேற்று காலை 10 மணி அளவில் நிகழ்ந்தது.
அந்த மூதாட்டி சாலையைக் கடந்துகொண்டிருந்தபோது தனியார் பேருந்து ஒன்று அவர் மீது மோதியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
ரெட் ஹில் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குப் பக்கத்தில் மருத்துவ உதவியாளர்கள் அந்த மூதாட்டிக்கு இதய இயக்க சிகிச்சை அளித்தனர். மூதாட்டியை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாண்டார். கவனமின்றி பேருந்து ஓட்டியதற்காக 49 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

