சிட்டிபேங்க் மோசடி வழக்கில் ஒற்றைப் பெற்றோர் ஒருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண் இவ்வழக்கில் தண்டணை விதிக்கப்பட்ட 13வது நபர்.
கடன்களைப் பெற போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றத்தில் 29 வயது கிரண் கவுருக்கும் (படம்) பங்கு இருந்ததாக நிரூபிக்கப்பட்டது. மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கடன் கேட்டு 20 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் சிட்டி குழுமத்தின் பயனீட்டாளர் பிரிவு கூறியது.
ஆனால் அந்த விண்ணப்பங்கள் தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்று பிறகு தெரியவந்ததாக அது கூறியது.
கவுருக்கு வேலை இல்லை என்றும் நிதி பிரச்சினையை எதிர்நோக்கியதாகவும் அரசாங்க வழக்
கறிஞர் தெரிவித்தார். இந்நிலையில், இணையத்தில் வலம் வந்த விளம்பரத்தைப் பார்த்து சார்ல்ஸ் என்பவருடன் அவர் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டார். சார்ல்சின் உண்மையான அடையாளம் குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
சிட்டிபேங்கிலிருந்து கடன் வாங்கித் தருவதாக கவுரிடம் சார்ல்ஸ் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
கவுரிடமிருந்து அவரது சிங்பாஸ் மறைச்சொல்லை சார்ல்ஸ் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள மெக்டோனல்ட் ஹவுஸில் இருக்கும் சிட்டிபேங்க் கிளைக்கு வெளியே அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரைச் சந்திக்குமாறு கவுரிடம் சார்ல்ஸ் தெரிவித்தார்.
அந்த ஆடவரிடமிருந்து கவுர் போலி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார். அதில் அவர் இன்னொரு வங்கியில் பணிபுரிவதாகவும் 2018ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாதச் சம்பளமாக $6,700 ஈட்டியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிட்டிபேங்க்கில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 29 வயது கெர்க் சுவா மின் சுவான் என்பவரைச் சென்று பார்க்கும்படி கவுரிடம் சார்ல்ஸ் கூறினார்.
கவுரின் கடன் விண்ணப்பம் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்டு பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கவுருக்கு மொத்தம் $13,490 கிடைத்தது. ஆனால் அதில் $4,000ஐ மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகையை சார்ல்ஸ் கூறியது போல தம்மிடம் போலி ஆவணத்தைக் கொடுத்த ஆடவரிடம் தந்ததாக கவுர் தெரிவித்தார்.
அதே ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதியன்று போலி ஆவணங்கள் குறித்து சிட்டிபேங்க் பிரதிநிதி ஒருவர் காவல்துறையில் புகார் செய்தார். போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்களில் கவுரும் அடையாளம் காணப்பட்டார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய மற்ற 12 பேருக்கு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. சுவாவின் வழக்கு நிலுவையில் உள்ளது.
சிட்டிபேங்க் வங்கியிடம் கவுர் $4,000 திருப்பிக் கொடுத்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறைத் தண்டனையைத் தொடங்க அடுத்த மாதம் 26ஆம் தேதியன்று அரசு நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

