சென்னை செல்வோர் கவனம்: விமான நிலையத்தில் முகக்கவசம் கட்டாயம்

சென்னை செல்வோர் கவனம்: விமான நிலையத்தில் முகக்கவசம் கட்டாயம்

2 mins read
34a47dfe-cc72-4166-828f-82ed092a3f7f
-
multi-img1 of 2

தமிழ்நாட்டுக்குச் செல்வோர், குறிப்பாக சென்னை விமான நிலையத்திற்குச் செல்வோர் மறக்காமல் முகக்கவசங்கள் அணிந்திருக்கவேண்டும். அப்படி முகக்கவசம் இல்லாதோருக்கு விமான நிலையத்திற்குள் அனுமதி மறுக்கப்படும்.

சிங்கப்பூரில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) முதல் பெரும்பாலும் உள்புறங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், பொதுப்போக்குவரத்து ஆகியவற்றைத் தவிர மற்ற இடங்களில் முகக்கவசம் அணியத் தேவை இல்லை.

சிங்கப்பூர் விமான நிலையத்திலும் முகக்கவசம் அணியத் தேவையில்லை. மேலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை. எனினும் பயணிகள் செல்லும் நாட்டைப் பொறுத்து முகக்கவசம் அணிவதா இல்லையா என்பது நிர்ணயிக்கப்படும் என்றும் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 சூழல் சிங்கப்பூரிலும் இந்தியாவில் தணிந்து வரும் நிலையில் சென்னைக்குச் செல்லும் பயணிகள் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை. அதேபோல விமான பயணிகள் அனைவரும், பயண நேரம் முழுமையும் கண்டிப்பாக முகக்கவசத்தை முறையாக வாய், மூக்கு மூடியிருக்கும் விதத்தில் அணிந்திருக்க வேண்டும்.

சில பயணிகளுக்கு முகக்கவசம் தொடர்ந்து அணிவதால், சுவாச பிரச்சினை போன்றவைகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட பயணிகள் முறையான அனுமதிபெற்று முகக்கவசம் விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாதவர்கள் மீது கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறை சட்டத்தின்படி, அபராதம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தண்டனை சட்டத்தின்படி, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி போன்றவைகளை, விமான நிலையத்தில் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொவிட்-19 பாதிப்பு தொடங்கியதிலிருந்து, சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் என அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது.