தடை உத்தரவை மீறியதற்காக வழக்கறிஞர் யூஜின் துரைசிங்கத்திற்கு $4,000 அபராதம்

தடை உத்தரவை மீறியதற்காக வழக்கறிஞர் யூஜின் துரைசிங்கத்திற்கு $4,000 அபராதம்

2 mins read
8a13889c-a594-4bd6-8575-e79e493b7fd4
-

தடை உத்தர்வை மீறிய குற்றத்திற்காக மூத்த குற்றவியல் வழக்கறிஞரான 47 வயது யூஜின் துரைசிங்கத்திற்கு இன்று (ஆகஸ்ட் 30) ​​ $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டபோது திரு யூஜின் மீது இன்னொரு வழக்கும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுயமாக வழக்கறிஞர் தொழில் செய்துவரும் திரு யூஜின் தனது உதவியாளர் திரு ஜொஹான்னஸ் ஹாடியை,32, ஒரு வழக்கு தொடர்பான ஆவணங்களைச் செய்தியாளர்களிடம் கொடுக்கச்சொல்லியுள்ளார்.

அந்த செயலால் ஒரு பாலியல் வழக்கில் வாதியாக இருக்கும் ஒரு பெண்ணின் அடையாளம் வெளியிடப்பட்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் தம்மை ஒரு மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்த்துள்ளதாக புகார் கொடுத்திருந்தார்.

திரு யூஜினும் திரு ஹாடியும் அச்சமயம் 52 வயது டாக்டர் இயோ சாவ் நாம்மைப் பிரதிநிதிக்கும் ஒரு வழக்கறிஞர் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர்.

பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களின் அடையாளங்களை வெளியிடுவதைத் தடுக்க அந்த வழக்கில் தடை உத்தரவு விதிக்கப்படலாம்.

அதன்படி இந்த வழக்கிலும் தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. டாக்டர் இயோவின்மீது குற்றம் சுமத்திய நபரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும் எந்த தகவலையும் வெளியிடுவது குற்றமாகும்.

நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு டாக்டர் இயோ குற்றமற்றவர் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. மேலும் இதே குற்றத்திற்காக அவர் மீது மீண்டும் வழக்கு தொடுக்க முடியாது. அப்போது அவர்மீது குற்றம் சுமத்திய பெண் பொய் கூறியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

துரைசிங்கம் மற்றும் ஹாடி இருவர் மீதும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. அதில் ஹாடியின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

கடந்த மார்ச் 5ஆம் தேதி பாலியல் குற்ற வழக்கைக் கையாளும் நீதிபதியிடம் அந்த வழக்கின் ஆவணங்களைச் செய்தியாளர்களிடம் விநியோகிக்கக் கோரியிருந்தார் திரு யூஜின்.

அப்போது அந்த வழக்கு விசாரணையில் கலந்துகொள்ள செய்தியாளர்களர்கள் உள்பட பொதுமக்களுக்குத் தடை அமலில் இருந்தது. அதைத் தொடர்ந்து தடை உத்தரவை மீறாத வகையில் ஆவணங்களில் தேவப்படும் மாற்றங்களைச் செய்துவிட்டு விநியோகிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

இந்த விவரங்களை துணை அரசு வழக்கறிஞர் சிவகுமார் ராமசாமி இன்று அரசு நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் 16 அன்று, திரு யூஜின் மின்னஞ்சல் மூலம் ஹாடியிடம், "புகார்தாரரின் பெயரை இருட்டடிப்பு செய்ய நினைவில் கொள்ளுங்கள், மேலும் புகார்தாரரின் பெயரை அச்சிட முடியாது என்பதை பத்திரிகைகளுக்கு நினைவூட்டுங்கள்" என்று கூறினார். ஆனால் திரு யூஜின் அந்தப் பெண்ணை அடையாளம் காண்பதற்கு வழிவகுக்கும் மற்ற தகவல்களையும் திருத்தும்படி திரு ஹாடிக்கு அறிவுறுத்தவில்லை.

அதனை தொடர்ந்து, ஹாடி பெண்ணின் பெயரை மட்டும் ஆவணங்களில் இருந்து மாற்றி, ஊடக உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில், அக்டோபர் 9, 2017 அன்று மாலை மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் 12 வது மாடியில் ஒரு பெண்ணைத் துன்புறுத்தியதாக டாக்டர் இயோ மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.