அனைத்துலகக் கரிமப் புள்ளிகளை வாங்கி கரிம வரிக் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டும்.
உதாரணமாக, 'வெரா', 'கோல்ட் ஸ்டாண்டர்ட்' ஆகிய அமைப்புகளில் இரண்டில் ஒன்று, வாங்கப்படும் கரிமப் புள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். கரிமப் புள்ளிகள் வாங்கப்படுவதன் மூலம் சுற்றுச்சூழலில் நச்சுக்காற்றின் அளவு குறைகிறதா என்பதை உறுதிசெய்ய இவ்விரு அமைப்புகளும் வழிமுறைகளை வரைந்துள்ளன.
இதன் தொடர்பில் சான்றிதழ் வழங்கப்பட்ட நிறுவனங்களின் தகவல்களைக் கொண்ட தளம், கரிமப் புள்ளிகளை வாங்கி விற்பதற்கான வசதி போன்ற அம்சங்களையும் இவ்விரு அமைப்புகள் கொண்டுள்ளன.
தங்களின் கரிம வரிக் கட்டணங்களைக் குறைத்துக்கொள்ள நிறுவனங்களுக்கு வகைசெய்ய 'வெரா', 'கோல்ட் ஸ்டாண்டர்ட்' ஆகியவற்றுடன் தேசிய சுற்றுப்புற வாரியம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. வாரியம் நேற்று இதை அறிவித்தது.
கரிம வரி செலுத்தவேண்டிய நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டிலிருந்து உயர்தர அனைத்துலகக் கரிமப் புள்ளிகளை வாங்கலாம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் 25,000 டன் அல்லது அதற்கும் அதிகமான அளவு நச்சுக்காற்றை வெளியிடும் நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.

