சிங்கப்பூர், இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த 100க்கும் அதிகமான மின்னற்படை வீரர்கள் பங்கெடுத்த கூட்டு ராணுவப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 'சந்திரபுரா' எனும் இந்த இருதரப்புக் கூட்டுப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
28வது ஆண்டாக நடைபெற்ற இப்பயிற்சி இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை இடம்பெற்றது.
பயிற்சியில் தடை தாண்டுவது, நகர்ப்புறங்களில் சண்டையிடுவது போன்றவற்றில் இருநாட்டுத் துரப்புகளும் திறன்களை மேம்படுத்திக்கொண்டன. மின்னற்படை வீரர்களுக்கான உத்திகள் உள்ளிட்டவற்றின் தொடர்பில் இருநாட்டு வீரர்கள் தங்களின் திறன்களைப் பகிர்ந்தும் கொண்டனர்.
"இந்நடவடிக்கைகள் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுவதோடு நட்பை ஆழமாக்கவும் இருதரப்பு வீரர்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தவும் கைகொடுக்கின்றன," என்று தற்காப்பு அமைச்சு கூறியது. மேலும், சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் தற்காப்பு உறவை 'சந்திரபுரா' எடுத்துக்காட்டுவதாகவும் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவது மட்டுமின்றி இருநாட்டு வீரர்களும் பங்கேற்கும் பாடத் திட்டங்களை நடத்துவது போன்ற நடவடிக்கைகளையும் சிங்கப்பூர், இந்தோனீசிய ராணுவப் படைகள் மேற்கொள்வதாக அமைச்சு கூறியது.

