ஜூரோங் பறவைப் பூங்கா, மாண்டாய் வனவிலங்கு காப்பகத்திற்கு அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் இடம்மாறுவதையொட்டி, வரும் 2023 ஜனவரி 3ஆம் தேதி அது மூடப்படுகிறது.
கடந்த 1971ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்பட்ட 20 ஹெக்டர் பரப்பளவுள்ள ஜூரோங் பூங்கா, 52வது ஆண்டில் அதன் செயல்பாடுகளை முடித்துக்கொள்கிறது. அதன்பிறகு பூங்காவின் ஊழியர்களும் ஏறக்குறைய 3,500 பறவைகளும் புதிய இடத்துக்கு மாற ஆயத்தமாவார்கள் என்று மண்டாய் வனவிலங்கு குழுமம் நேற்று தெரிவித்தது.
மண்டாயில், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ரிவர் சஃபாரி, நைட் சஃபாரி, புதிய மழைக்காடு, பனியன் ட்ரீ ஹோட்டல்கள் & ரிசார்ட்ஸால் இயக்கப்படும் புதிய விடுதி ஆகியவற்றுடன் புதிய பறவைகள் காப்பகமும் இணைகிறது.
புதிய காப்பகம் பற்றிய அறிவிப்புகள் பின்னர் பகிரப்படும் என்று மண்டாய் வனவிலங்கு குழுமம் கூறியது. மண்டாய் வனவிலங்கு காப்பகத்தின் ஏனைய புதிய இடங்கள் 2024ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜூரோங் பறவைப் பூங்கா மூடப் படவுள்ளதை ஒட்டி பல நிகழ்ச்சி கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பூங்காவின் வரலாற்றின் முக்கிய மைல்கற்களைச் சித்திரிக்கும் மரபுடைமைப் பாதையில் பூங்காவின் மரபுடைமைச் சிறப்புகளை ரசிக்கலாம். நவம்பர் முதல், அனுபவமிக்க வழிகாட்டிகள் பூங்காவின் பறவைகள், அதன் வடிவமைப்பு பற்றி பகிர்ந்துகொள்வார்கள்.
அக்டோபர் 19 முதல் சுற்றுலாவுக்கு பதிவுசெய்யலாம்.
நவம்பரில் தள்ளுவண்டி உணவு களையும் கொண்டாட்ட நடவடிக்கைகளையும் ரசிக்கலாம்.
பூங்காவில் 1992 முதல் 2012 வரை செயல்பட்ட மோனோரயில் இலகு ரயில் சேவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பூங்காவின் பழைய குக்கூ மணிக்கூண்டு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூரோங் பறவைப் பூங்காவின் துணைத் தலைவர் டெய்சி லிங், 1982இல் அங்கு கல்வி அதிகாரியாகப் பணிபுரியத் தொடங்கினார்.
"பூங்காவின் தொடக்க காலத்திலிருந்து இங்கு பணிபுரிபவர்கள் பலர் உள்ளனர். நாங்கள் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்குமுன், பூங்காவின் இந்தக் கொண்டாட்டத்தில் பொதுமக்களும் இணையலாம்," என்றார் அவர்.
மேலும் சில நிகழ்ச்சிகள் வரும் நாள்களில் அறிவிக்கப்படும்.
பூங்கா வியாழன் முதல் ஞாயிறு வரை திறந்திருக்கும், அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது விடுமுறை நாள்களிலும், காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
பூங்காவின் மூடுவிழா குறித்த மேல் விவரங்களை https://www.mandai.com/en/jurong-bird-park/things-to-dowhats-on/a-flight-to-remember.html என்ற இணையத்தளத்தில் காணலாம்.

