சிங்கப்பூரின் நீச்சலில் நம்பிக்கை நட்சத்திரம் என்று போற்றிப் புகழப்படும் ஜோசஃப் ஸ்கூலிங், கஞ்சா புழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது செய்கைக்காக ஸ்கூலிங் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உள்ளார். திடீரென்று ஏற்பட்ட மன உந்துதல் காரணமாக முன்பின் யோசிக்காமல் அந்தக் காரியத்தைத் தான் செய்துவிட்டதாக அவர் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
எப்படியும் மீண்டு உச்சத்துக்கு வருவேன் என்று அவர் நம்பிக்கை யுடன் உறுதி தெரிவித்துள்ளார்.
இந்த சங்கடமான காலத்தில் அவருக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அவருக்கு தொடர்ந்து வலுவான ஆதரவு வழங்கப்போவதாக ஜெர்மனியின் ஆடம்பர நவநாகரீக பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான 'ஹியூகோ பாஸ்' தெரிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ டிஜெனிரோவில் சிங்கப்பூரின் முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பெற்று அவர் வரலாறு படைத்தார். அந்தப் பதக்கத்தை அவர் சாதனை நேரத்துடன் வென்றார். ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு 23 முறை தங்கப் பதக்கம் பெற்ற மைக்கல் ஃபெல்ப்ஸ், ஸ்கூலிங்கை பாராட்டினார்.
'நீச்சல் கலையுடன் பிறந்தவர், நீந்துவதற்கே பிறந்தவர், நம்பிக்கைமிக்கவர், கட்டொழுங்குடன் கூடியவர், கருணை உள்ளவர்," என்றெல்லாம் அவர் போற்றி புகழப்பட்டார்.
ஸ்கூலிங், 27, சிங்கப்பூரின் கதாநாயகனாக, தங்க மகனாக, நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார். வியட்னாமில் இந்த ஆண்டு மே மாதம் நடந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள தேசிய சேவையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு அவர் அங்கு சென்றார். தான் அங்கு கஞ்சா புழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து ஸ்கூலிங் நிலை தலைகீழாக மாறிவிட்டது. பல விசாரணைகளுக்கும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கும் அவர் உட்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டொழுங்கு இல்லாதவர், திடீர் உந்துதலுக்கு ஆட்படக்கூடிய வர், ஒருமித்த கவனம் இல்லாதவர் என்று பேசும் அளவுக்கு இப்போது அவரின் நிலை ஆகிவிட்டது.
அவர், மறுபடியும் எழுந்து மீண்டும் உச்சத்தைப் பிடிக்க ஏதேனும் ஒரு வழியாவது இருக்காதா என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது.

