கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கொரோனா வுக்கு எதிரான தடுப்பூசிகள் ஆற்றல்மிக்கவை அல்ல என்ற கருத்து மக்களிடம் ஏற்படும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டதற்காக 'டுரூத் வாரியர்ஸ்' என்ற இணையத் தள நிர்வாகிக்கு 'போஃப்மா' அலுவலகம் நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கையைப் பிறப்பித்து இருக்கிறது.
அந்தத் தளத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இரண்டு கட்டுரைகளுக்காக அந்த எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
அந்த இணையத் தளத்தை நிர்வகிப்பவர் 47 வயது மாது. அவருக்கு 12 மாத நிபந்தனை எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்று அந்த அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
தவறான செய்திகள் வெளியாகிவிட்டதாக சிங்கப்பூரர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அந்த இணையத்தளத்தில் திருத்த அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்று சென்ற ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி அந்த மாதுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அடுத்த 12 மாத காலத்தில் மீண்டும் அந்த மாது தவறு செய்தால் முந்தைய குற்றத்திற்காக அவர் மீது வழக்குத் தொடுக்க முடியும் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியது.

