உணவு, சில்லறை விற்பனை: சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறலாம்
உணவு சேவைகள், உணவு உற்பத்தி, சில்லறை விற்பனை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் $30,000 வரை எரிசக்திச் செயல்திறன் மானியம் பெற இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்.
நேற்று நடந்த வருடாந்தர சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நிலைய மாநாட்டில் கலந்துகொண்டபோது வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் இதனை அறிவித்தார்.
எரிசக்தியைச் சிக்கனமாக செலவழிக்கவும் வாங்கவும் ஒட்டுமொத்த நடைமுறைச் செலவுகளைக் குறைக்கவும் விரும்பும் நிறுவனங்களுக்கு நிதியாதரவு அளிக்கும் விதமாக இம்மானியம் வழங்கப்படுகிறது என்று திருவாட்டி லோ சொன்னார்.
இம்மானியம் குறித்து நிதிஅமைச்சு கடந்த ஜூன் மாதமே அறிவித்திருந்தது.
அதன்படி, எல்இடி விளக்குகள், குளிரூட்டிகள், சமையல் அடுப்புகள், குளிர்பதனப் பெட்டிகள், நீர் சூடேற்றிகள், உலர்த்திகள் போன்ற, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் கருவிகளை வாங்குவது போன்றவற்றிற்கு இந்த மானியத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
'என்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பும் பிரெஞ்சுப் பன்னாட்டு நிறுவனமான 'ஸ்னைடர் எலக்ட்ரிக்'கும் இணைந்து சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான கரிமநீக்கத் திட்டத்தை வகுத்து வருவதாகவும் திருவாட்டி லோ தெரிவித்தார்.
அத்திட்டத்தின்கீழ், கரிமநீக்க இலக்குகள், எரிசக்திச் சிக்கன சேவைகள், எரிசக்திப் பயன்பாடு மற்றும் கரிம வெளியேற்றக் குறைப்பு ஆகியவை தொடர்பில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், வல்லுநர்களுடன் இணைந்து செயல்பட முடியும் என்று அமைச்சர் விவரித்தார்.
கொவிட்-19 தொற்றுக்குப் பிந்திய காலகட்டத்தில் பசுமைப் பொருளியலில் உள்ள புதிய வாய்ப்புகளை வளர்ச்சிக்கான புதிய பாதையாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நீடித்த நிலைத்தன்மையைத் தழுவவும் பசுமைப் பொருளியலில் ஓர் அங்கமாக இருக்கவும் உதவும் வகையில், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் பல்வேறு ஆதரவுத் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருப்பதாக அவர் சொன்னார்.
அவ்வகையில், நீடித்த நிலைத்தன்மைப் பயணத்தைத் தொடங்க விரும்பும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் 'தொழில்நிறுவனங்களுக்கான நீடித்த நிலைத்தன்மைத் திட்டத்தை (இஎஸ்பி) பயன்படுத்திக்கொள்ளலாம்.
கடந்த அக்டோபரில் 'என்டர்பிரைஸ் எஸ்ஜி' அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டமானது, பசுமைப் பொருளியல் பயணத்தில் புதிய அல்லது தொடக்க நிலையில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு அதுகுறித்த பயிற்சியையும் விழிப்புணர்வையும் வழங்கி வருகிறது.

