மானபங்கச் சம்பவங்கள் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் பாதியில் அதிகரித்துள்ளன. அத்துடன், மூன்றில் இரண்டு சம்பவங்களில், மானபங்கக் குற்றம் புரிந்தவரை பாதிக்கப்பட்டவர் அறிந்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரை பதிவான 773 மானபங்கச் சம்பவங்கள், சென்ற ஆண்டின் 739 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 4.6% அதிகரிப்பாகும். மேலும், மானபங்கக் குற்றம் புரிந்தவரை பாதிக்கப்பட்டவர் அறிந்திருந்த சம்பவங்களில் 9.6% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதற்கிடையே, மானபங்கச் சம்பவங்களில் அறிமுகமில்லாத நபரால் குறி வைக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் முற்பாதியில் இருந்த 293இலிருந்து இவ்வாண்டின் முற்பாதியில் 284க்குக் குறைந்துள்ளது.
"பொதுப் போக்குவரத்தில் பதிவாகும் மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கை கவலை அளிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது," என்று காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட குற்றச்செயல் புள்ளிவிவரப்படி, ஆண்டின் முற்பாதியில் மொத்தம் 80 மானபங்கக் குற்றங்கள் பொதுப் போக்குவரத்தில் நடந்தவை.
இந்தச் சம்பவங்களில் அறிமுகமில்லாத நபர்களால் பொதுப் போக்குவரத்தில் நேர்ந்தவை 63.8%. அத்துடன் 13 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் குறிவைக்கப்பட்டனர் என்றும் அறியப்படுகிறது.
கண்காணிப்பு கேமராக்கள், அங்க அடையாளங்கள் மற்றும் உடுத்தியிருந்த உடைகள் என பாதிக்கப்பட்டோர் கூறும் முக்கியத் தகவல்கள் குற்றவாளிகளைப் பிடிக்கப் பேருதவியாக இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் மானபங்கம் தொடர்பான விழிப்புணர்வுக் காணொளி ஒன்றை எம்ஆர்டி நிலையங்களில் அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
எந்நேரமும் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்குமாறு காவலர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மின்தூக்கியில் தனியாகச் செல்லும்போது திடீரென ஒருவர் உள்ளே நுழைந்தால் மின்தூக்கியிலிருந்து வெளியேறுவது பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளனர். யாரேனும் பின்தொடர்வது போல் தோன்றினால் கூட்டமான ஓர் இடத்தை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

