இணைய வர்த்தகத் தளமான 'கேரோசல்' வழியாக மொத்தம் 396 பேரை ஏமாற்றி அவர்களிடமிருந்து $100,000க்கும் மேற்பட்ட தொகையை கேன் போ ஸென்லோங் கையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இதுவரை நடந்த இணைய வர்த்தக மோசடிச் சம்பவங்களில் தனியாளாக ஆகப் பெரிய அளவில் நடந்த மோசடி இது.
போவுக்கு நேற்று ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையும் $17,000 அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதத்தைக் கட்ட முடியாவிட்டால் மேலும் 10 வாரச் சிறையை போ அனுபவிக்க நேரிடும்.
'கேரோசல்' தளத்தில் சிலர் ஏமாற்றப்பட்டதை 2018ஆம் ஆண்டில் வெளிவந்த செய்தித்தாள்கள்வழி அறிய வந்த போ, தானும் அதே குற்றங்களைப் புரிய முடிவெடுத்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. பல்வேறு 'கேரோசல்' கணக்குகளுக்கு போ பதிவுசெய்துவிட்டு ஃபேஸ்புக்வழி வேலை தேடும் நபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சிலர் போவின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு தாங்கள் வேலை தேடுவதாகக் கூற, அவர்களின் கைபேசி எண்ணைக் கொண்டு 'கேரோசல்' கணக்குகளுக்கு போ பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்பட்டது. வேலை தேடியோரின் கைபேசிக்கு வந்த 'ஒரு முறை கடவுச்சொல்' என்ன என்பதையும் கேட்டறிந்த போ, அதன் பின் அவர்களுடன் தொடர்பில் இல்லாமல் போனதாகக் கூறப்பட்டது.
சுற்றுப்பயண இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை விற்பதாக பாசாங்கு செய்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் மாற்றுமாறு போ சொன்னதாகவும் வங்கிக் கணக்குகளுக்கும் போவின் இணையச் சூதாட்டக் கணக்குகளுக்கும் இணைப்பு இருந்ததால், பணத்தைக் கொண்டு போ சூதாடியதாகவும் கூறப்பட்டது.

