செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0bd29e53-3cb8-47b9-977a-3c11f16fe34b
-

இஸ்தானா விபத்துக்கு காரணமான அதிகாரிக்கு $2,500 அபராதம்

இஸ்தானா பகுதியிலுள்ள சாலை ஒன்றில் வாகனம் வருவதைக் கவனிக்காமல் தடுப்புகளை உயர்த்திய செர்ட்டிஸ் சிஸ்கோ துணை காவல் அதிகாரி 29 வயது டான் சீ கியட், விபத்து நேரக் காரணமானதை அடுத்து நேற்று அவருக்கு $2,500 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்தாண்டு அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூருக்கு வருகையளித்தபோது, ஆகஸ்ட் 23 காலை வேளையில் விபத்து நடந்ததாக அறியப்படுகிறது. வெளியுறவு அமைச்சுக்கான நிரந்தரச் செயலாளர் திரு சீ வீ கியோங் சென்ற கார், விபத்தில் சிக்கிய நிலையில் திரு சீக்கும் அவரின் ஓட்டுநர் திரு அப்துல் லத்திஃப் கரிமுக்கும் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கார் வருவதைக் கவனிக்காத டான், சாலையில் பொருத்தப்பட்ட தடுப்புகளை உயர்த்துவதற்கான கட்டுப்பாட்டு பொத்தானை இயக்கினார். இதனால் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வந்த காரை, திரு லத்திஃப் நிறுத்த முடியாமல் போனது.

போலி ஊதியச் சீட்டுகள்வழி வங்கி

கடன் பெற உதவிய நபருக்கு சிறை

போலி ஊதியச் சீட்டுகளை 26 வயது இங் ஜியா ஹாவ் தன் நண்பருக்குத் தந்ததை அடுத்து சிட்டிபேங்க் வங்கியிலிருந்து கிட்டத்தட்ட $13,000 கடன் பெறுவதற்கு அச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. குறைந்தது மூன்று பேருடன் சதித் திட்டம் தீட்டி வங்கியை ஏமாற்றிய குற்றத்தை இங் ஒப்புக்கொண்ட நிலையில் நேற்று இங்குக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வங்கி ஒப்புதல் வழங்கிய சுமார் 20 கடன் விண்ணப்பங்களில் போலி ஊதிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விநியோக ஊழியர்களை பிரதிநிதிக்கும் கட்டமைப்பு

பேச்சுவார்த்தையின்போது டாக்சி ஓட்டுநர்கள், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள், விருப்புரிமை விநியோக ஊழியர்கள் ஆகியோருக்கு அவரவரின் தளத்தில் மேலும் சிறந்த பிரதிநிதித்துவம் கிடைப்பதைப் புதிய பணிக்குழு ஒன்று உறுதிசெய்யவுள்ளது. பணிக்குழுவில் அரசாங்கம், தொழிலாளர் இயக்கம், தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். நேற்று முன்தினம் முதல்முறையாகச் சந்திப்புக் கூட்டம் நடத்திய இந்த முத்தரப்புப் பணிக்குழு, தளங்களைச் சார்ந்துள்ள ஊழியர்களை ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதிக்கும் ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கு ஆணையிடும் அதிகாரம் வழங்க புதிய கட்டமைப்பு ஒன்றைப் பரிந்துரை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளது.