வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) நேற்று முன்தினம் 4,993 தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) வீடுகளை விற்பனைக்கு விட்டது. ஆனால், விற்பனை தொடங்கி ஒரே நாளில் சற்று பெரிதான வீடுகளுக்கு அமோக வரவேற்பு என்று தெரியவந்தது.
குறிப்பாக, அங் மோ கியோவில் அமைந்துள்ள ஐந்தறை வீடுகளும் மூன்று தலைமுறை வீடுகளும் மக்களிடையே பிரபலமாக உள்ளன. சென்ட்ரல் வீவ்@ அங் மோ கியோ வீட்டுத் திட்டத்தின் கீழ் விற்கப்படும் 372 ஐந்தறை மற்றும் மூன்று தலைமுறை வீடுகளுக்கும் நேற்று மாலை நிலவரப்படி 2,541 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இவ்வீடுகளின் விலை $713,000க்கும் $877,000க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதன்படி, ஒவ்வொரு வீட்டுக்கும் முதல் முறை விண்ணப்பிப்போர் மூவர் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக வீடு வாங்குவோருக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் 82 பேர் போட்டியிடுவதாக உள்ளது.
புக்கிட் மேராவின் இரு வீட்டுத் திட்டங்களில் இடம்பெறும் நான்கறை வீடுகளைக் காட்டிலும் அங் மோ கியோவின் பெரிய வீடுகளுக்குக் கூடுதல் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
ரெட்ஹில், தியோங் பாரு எம்ஆர்டி நிலையங்கள் அருகே அமைந்திருக்கும் அலெக்சாண்டிரா வேல், ஹேவ்லாக் ஹில்சைடு பிடிஓ திட்டங்களில் மொத்தம் 1,298 நான்கறை வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. நேற்றைய நிலவரப்படி இந்த வீடுகளுக்கு 2,465 விண்ணப்பங்கள் வந்துவிட்டன.
இதற்கிடையே வரும் நாள்களில் விண்ணப்பங்கள் அதிகரித்துக்கொண்டே போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மூவறை வீடுகளுக்கு அதிகமான விண்ணங்கள் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆறு வட்டாரங்களில் ஏழு வீடமைப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

