ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் (என்டியுசி) தொடங்கி இருக்கும் புதிய மின்னிலக்க வங்கி நேற்று வாடிக்கையாளருக்குத் தன் மெய்நிகர் கதவுகளைத் திறந்துவிட்டது.
சேமிப்புக் கணக்கு, கடன் அட்டை, குடும்ப விபத்து காப்புறுதிச் சேவை ஆகியவற்றை அந்த வங்கி வழங்கும்.
'டிரஸ்ட் பேங்க்' எனப்படும் அந்த மின்னிலக்க வங்கியில் என்டியுசி எண்டர்பிரைஸ் நிறுவனத்துக்கு 40% பங்கு இருக்கும். ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கிக்கு 60% பங்கு இருக்கும்.
அந்த வங்கியில் பணத்தைச் சேமிப் போருக்கு முதல் $50,000 தொகைக்கு ஆண்டுக்கு 1.4% வட்டி கிடைக்கும்.
டிரஸ்ட் பேங்க் வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்கினால், பற்று அட்டை கொடுக்கப்படும். அந்த அட்டை மூலம் என்டியுசி உறுப்பினர்கள் 11% லிங்க்பாயிண்ட்ஸ் கழிவுகளைப் பெறலாம்.
மற்றவர்களுக்கு இந்தத் தள்ளுபடி அதிகபட்சம் 5% இருக்கும்.
புதிய சேமிப்புக் கணக்குத் தொடங்குவோர், குறைந்தபட்சமாக குறிப்பிட்ட ஒரு தொகையைக் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. கட்டணம் எதுவும் இராது.
இந்த மின்னிலக்க வங்கி என்டியுசி உறுப்பினர்களுக்கு அதன் கடன் அட்டை பேரில் 21% லிங்க்பாயிண்ட்ஸ் கழிவுகளைக் கொடுக்கும். மற்றவர்களுக்கு இந்த அளவு 15% ஆக இருக்கும். இந்த மின்னிலக்க வங்கியின் கடன் அட்டையைப் பெறுவோர், அதற்காக வருடாந்திர கட்டணம் எதையும் செலுத்த வேண்டாம்.
வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. என்டியுசி இன்கம் நிறுவனத்தின் குடும்ப விபத்து காப்புறுதி திட்டத்தையும் இந்த வங்கி வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற மாத சந்தா 50 காசு.இதில் சேர்வோர் முதல் இரண்டு மாதங்களுக்குச் சந்தா செலுத்த வேண்டாம்.
இதனிடையே, புதிய வங்கி பற்றி கருத்து கூறிய அதன் தலைமை நிர்வாகி, என்டியுசியை சார்ந்தவர்களே இந்த வங்கியின் மூலாதார வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என்றார்.
வங்கி தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், முதிய சிங்கப்பூரர்களுக்குச் சேவையாற்ற டிரஸ்ட் பேங்க் திட்டமிடுவதாகத் தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தை அதிகம் நாடாதவர்களைக் கருத்தில்கொண்டு, வங்கி முறைகளை எளிமைப்படுத்தி அதன் மூலம் அத்தகையோருக்குச் சேவையாற்ற வங்கி திட்டமிடுகிறது என்று அவர் கூறினார்.
வாடிக்கையாளர்களின் தேவைகளைச் சிறந்த முறையில் நிறைவேற்றத் தோதாக புத்தாக்க திட்டங்களைத் தொடங்க இந்த வங்கி கருதுவதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.
கடன் வாங்கும் தொகையை எப்படி திருப்பிச் செலுத்துவது என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கும் சிங்கப்பூரின் முதலாவது கடன் அட்டையை இந்த வங்கியே கொடுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

