எஃப்1 கார் பந்தயத்தின்போது
ரயில், பேருந்துச் சேவை நேரம் நீட்டிப்பு
செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறும் எஃப்1 கார் பந்தயத்தின்போது அனைத்து ரயில் சேவை நேரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்துச் சேவை நேரமும் நீட்டிக்கப்படும். கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் கார் பந்தயம் மரினா சென்டர், பாடாங் பகுதியைச் சுற்றி இடம்பெறும்.
செப்டம்பர் 30, அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையத்தில் ரயில் சேவை நள்ளிரவு 12.30 மணி வரையும் அக்டோபர் 2ஆம் தேதி பின்னிரவு 12.45 மணி வரையும் கிடைக்கும்.
கடைசி ரயில் சேவைக்கு நிகராக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைப் பேருந்துச் சேவை நேரமும் நீட்டிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப் பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைகளில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை எஸ்எம்ஆர்டி நிறுவனம் நீட்டிக்கும். அக்டோபர் 2ஆம் தேதி பாசிர் ரிஸ், மரினா சௌத் பியர், ஜூரோங் ஈஸ்ட், துவாஸ் லிங்க் ஆகிய எம்ஆர்டி நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் பின்னிரவு 12.45 மணிக்குப் புறப்படும்.
இந்த மூன்று நாள்களில், சுவா சூ காங், உட்லண்ட்ஸ் பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் இருந்து புறப்படும் பேருந்துச் சேவைகள் சிலவற்றின் செயல்பாட்டு நேரத்தையும் எஸ்எம்ஆர்டி நீட்டிக்கும். 300, 301, 302, 307, 901, 911, 912A, 912B, 913 ஆகியன இந்தப் பேருந்துச் சேவைகள்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம்
அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது. ஒரு சில நாள்களில் வெப்பமான வானிலையும் நிலவலாம் என்று அது நேற்று கூறியது.
சிங்கப்பூரிலும் இதைச் சுற்றியுள்ள பகுதியிலும் தென்மேற்குப் பருவநிலை தொடரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அல்லது தென்மேற்குப் பகுதிகளில் இருந்து பெரும்பாலான நாள்களில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான நாள்களில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் காலையிலும் பகலிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில நாள்களில் பின்னிரவிலும் அதிகாலையிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாள்களில் மிதமானது முதல் கனமழை வரை பரவலாகப் பெய்வதை எதிர்பார்க்கலாம். அடுத்த இரு வாரங்களில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அளவு கிட்டத்தட்ட சராசரி நிலையை எட்டக்கூடும்.