சிங்கப்பூர் ஹோட்டல்களின் சராசரி அறை வாடகை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூலை மாதம் கூடியது. அனைத்துலக எல்லைகள் திறக்கப்படுவதால் உலகளாவிய பயணிகள் வரத் தொடங்கிவிட்டார்கள்.
சிங்கப்பூர் ஹோட்டல்களின் சராசரி அறை வாடகை ஜூலை மாதம் $259 ஆக இருந்தது. 2012 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இதுவே ஆக அதிகம். சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரம் தெரியவருகிறது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், அது இந்த ஆண்டு ஜூலையில் 69.2% கூடி இருக்கிறது. மாத அடிப்படையில் இந்த வளர்ச்சி 7.7% ஆகும்.
ஒட்டுமொத்தமாக ஜூலையில் ஹோட்டல் வருவாய் $318.5 மில்லியனாக இருந்தது. இது சென்ற ஆண்டு இதே மாதம் அவற்றுக்கு கிடைத்த வருவாயைவிட நாலரை மடங்கிற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூருக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை ஜூன் மாதம் 543,733 ஆக இருந்தது. இது ஜூலையில் 726,601 ஆகக் கூடியது. இந்த நிலையில் ஹோட்டல் தொழில்துறை அறை வருமானம் அதிகரித்து உள்ளது.
ஓர் அறைக்கான வருவாய் ஜூலை மாதம் $204.99 ஆக இருந்தது. இது முந்திய ஆண்டைவிட 140.3% அதிகம். ஜூன் மாதத்தைவிட 9.2% இது அதிகம்.
சராசரி ஹோட்டல் அறை பயனீட்டு விகிதம் ஜூலையில் 79% கூடின. இந்த ஆண்டில் இன்றைய தேதிவரை பார்க்கையில், ஒட்டுமொத்த ஹோட்டல் அறை வருவாய் $1.39 பில்லியன். இது சென்ற ஆண்டு முழுவதற்கும் கிடைத்த வருவாயைவிட அதிகம்.
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் ஹோட்டல் அறைகளின் சராசரி வாடகை $220.93ஆக இருந்தது. இது சென்ற ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 47.2% அதிகம்.

