மோசடியில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 325 பேரிடம் விசாரணை
பல்வேறு மோசடி நடவடிக்கைகளின் மூலம் பலரை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் 325 பேர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் $9 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையைப் பறிகொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
கடந்த மாதத்தில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் சந்தேகப் பேர்வழிகள் சிக்கினர்.
அவர்களில் 201 பேர் ஆண்கள் என்றும் 124 பேர் பெண்கள் என்றும் நேற்று தெரிவித்த காவல்துறை, அவர்கள் 16 வயதுக்கும் 86 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் ஏமாற்றியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமம் இல்லாமல் கடன் வழங்கியது எனும் பல குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரிக்கப்படுகிறார்கள் என்றும் கூறியது.
அவர்கள், பெரும்பாலும் வர்த்தக மின்னஞ்சல் ஊடுருவல், மின் வர்த்தகம், ஆள்மாறாட்டம், இணையக் காதல், முதலீடு, இணைய மோசடிகள் என 695 குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
சிங்கப்பூர் காவல்துறையில் வர்த்தக விவகாரப் பிரிவினர், காவல்துறையின் ஏழு தரைப்பிரிவுகளின் அதிகாரிகள் ஆகியோர் ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 1ஆம் தேதி வரை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஒவ்வொரு ஏமாற்று குற்றச் செயலுக்கும் குற்றவாளிக்கு 10 ஆண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10 ஆண்டு வரை சிறையும் $500,000 வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் கடன் வழங்கும் ஒவ்வொரு குற்றத்துக்கும், குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறையும் $125,000 அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உதவி என்ற பேரில் உங்களின் வங்கிக் கணக்கு விவரங்களையோ கைப்பேசி எண்ணையோ மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தும் காவல்துறை, இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படலாம் என்றது.
காவல்துறை அண்மையில் வெளியிட்ட குற்றங்கள் தொடர்பான அரையாண்டு புள்ளிவிவரத்தின்படி, மொத்தம் $346.5 மில்லியன் தொகை பறிபோயிருக்கிறது என்று தெரியவருகிறது.
பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள மோசடி சம்பவங்களில் $227 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை மக்கள் இழந்துள்ளனர். அந்த மோசடிகளில் ஆக அதிகமானது வேலை தொடர்பான மோசடி. கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இந்த வகை மோசடியில் $142.5 மில்லியன் பணம் இழப்பு ஏற்பட்டது.
இவ்வாண்டு முற்பாதியில் மொத்தம் 14,349 மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒப்புநோக்க கடந்த ஆண்டு முற்பாதியில் மொத்தம் 7,746 மோசடி சம்பவங்கள் நிகழ்ந்தன.

