சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து மலேசியர்கள் சிறையில் உள்ளனர் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
அவர்களில் பலரும் போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
பத்து பேரும் தங்கள் கருணை மனு விண்ணப்பங்கள் குறித்த முடிவுக்குக் காத்திருக்கின்றனர் என்று திரு சண்முகம் கூறினார்.
மலேசியாவின் தி ஸ்டார் செய்தித்தாளுக்கு சில நாள்களுக்கு முன்னர் அளித்த மெய்நிகர் பேட்டியில் அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தலின் தொடர்பில் சிங்கப்பூர் கடுமையானப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் கூறிய திரு சண்முகம், மரண தண்டனையை அகற்ற உள்ளூர், அனைத்துலகத் தரப்புகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு அது அடிபணியாது என்றார்.
மலேசியா அல்லது மற்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் போதைப் பொருள்களைக் கடத்துவோர், இங்குள்ள கடுமையான சட்டங்கள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் தெரிந்தே அதைச் செய்வதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.
சிலர் மரண தண்டனைக்கான வரம்பு என்னவென்று தெரிந்து, அதற்கேற்பவும் தங்களுக்கு லாபம் தரும் அளவிலும் போதைப் பொருளை இங்கு கடத்துவதாக அவர் சொன்னார்.
போதைப் பொருள் கடத்தல் குற்றங்களின் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம், கல்வாந்த் சிங் எனும் இரண்டு மலேசியர்கள் சில மாதங்களுக்கு முன் தூக்கிலிடப்பட்டனர்.

