நிறுவனத்தின் 60 ஊழியர்கள் ஆட்குறைப்பு
உணவை விநியோகிக்கும் ஃபுட்பாண்டா நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள அதன் 1,200 ஊழியர்களில் ஐந்து விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 60 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் தனது வட்டாரத் தலைமையகத்தைத் திறந்த இரண்டு மாதங்களிலேயே நிறுவனம் ஆட்குறைப்பில் ஈடுப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஊழியர்கள் கடந்த வாரம் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக 'டீல்ஸ்திரீட்ஏஷியா' எனும் இணையத்தளம் தெரிவித்தது.
தனது தாய் நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த 'டெலிவரி ஹீரோ', வட்டி, வரி, சொத்து மதிப்பிழப்பு போன்றவற்றைக் கணக்கிடும் முன்னர் நிறுவனத்தின் அடிப்படை செயல்பாடுகள் லாபத்தை ஈட்டவேண்டும் என்ற தெளிவான இலக்கைக் கொண்டு உள்ளது என்று ஃபுட்பாண்டாவின் பேச்சாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதனால் போட்டித்தன்மையைக் காப்பதற்கு செலவு களைக் குறைத்து லாபத்தை ஈட்ட வேண்டிய அவசியம் உள்ளதாக பேச்சாளர் கூறினார்.
வட்டி, வரி, சொத்து மதிப்பிழப்பு போன்றவற்றைக் கணக்கிடும் முன்னர் ெடலிவரி ஹீரோவின் சென்ற ஆண்டின் இழப்பு 888.8 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது என்று அதன் ஆண்டறிக்கை கூறியது.
இந்த ஆண்டு ஜூலையில் ஃபுட்பாண்டா சிங்கப்பூரை அதன் வட்டார அலுவலகமாகவும் உலகளாவிய தொழில்நுட்ப மையமாகவும் அறிவித்தது. ராபின்சன் ரோட்டில் அது அலுவலகத்தையும் திறந்தது.
ஃபுட்பாண்டா ஆட்குறைப்பு செய்துள்ள வேளையில் சந்தைப் படுத்துதல், ஊடகத் துறைகளில் வேலைக்கு ஆள் தேடும் அதன் விளம்பரங்களைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
சிங்கப்பூருடன், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களை நிறுவனம் ஆள்குறைப்பு செய்துள்ளது.