அதிகரித்துள்ள பணவீக்கம் சிங்கப்பூரின் பெரும் செல்வந்தர்களையும் விட்டுவைக்கவில்லை. இதன் காரணமாக அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இந்த ஆண்டு 20% வரை குறைந்துள்ளது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
சிங்கப்பூரின் 50 பெரும் செல்வந்தர்கள் பட்டியலின்படி, அவர்களின் மொத்த சொத்து மதிப்பு US$164 பில்லியன் (S$230.4 பில்லியன்) என்றும் 2021ல் இருந்த US$208 பில்லியன் சொத்து மதிப்பைக் காட்டிலும் இது குறைவு என்று நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.
பெரும் செல்வந்தர்களுக்கு சிங்கப்பூர் ஒரு பிரபலமான வர்த்தகத் தளமாக இருந்து வருகிறது என்றாலும், அதிகரித்து வரும் பணவீக்கமும் உலகளவில் தங்கள் தொழில்நுட்பப் பங்குகளை அவர்கள் விற்று வருவதாலும் இந்த ஆண்டு முதல் 50 இடங்களில் உள்ள சிஙகப்பூர் செல்வந்தர்களும் பாதிக்கப்பட்டனர்.
பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தவர் ஷென்சென் மிண்ட்ரே உயிர் மருத்துவ மின்னணுவியல் நிறுவனத்தின் தோற்றுநரும் தலைவருமான லி ஸிட்டிங். அவரது சொத்து மதிப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்து US$15.6 பில்லியன் ஆனது.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஃபார் ஈஸ்ட் ஆர்கனைசேஷன் நிறுவனத்தின் ராபர்ட் மற்றும் பிலிப் இங் சகோதரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு US$14.2 பில்லியனிலிருந்து இந்த ஆண்டு US$15.2 பில்லியனுக்கு உயர்ந்தது. சொத்துச் சந்தையின் மீட்சி அவர்களுக்கு இந்த உயர்வைத் தந்தது.
பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள ஜப்பானின் நிப்போன் சாய நிறுவனத்தின் 95 வயது செல்வந்தர் கோ செங் லியாங்கின் சொத்து மதிப்பு US$13 பில்லியன்.
உலகளவில் தொழில்நுட்பப் பங்குகளை விற்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் எட்வார்டோ சவரினின் சொத்து மதிப்பு US$9.6 பில்லியன். பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள இவர் அண்மையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா என்று மாற்றினார்.
பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள சிட்டி டெவலப்மண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் குவேக் லெங் பெங்கின் சொத்து மதிப்பு உயர்ந்து US$9.3 பில்லியன் ஆனது. கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு US$8.5 பில்லியன் என்று இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

